பசுமை இந்தியாவை உருவாக்க வேண்டும்: மாதா அமிர்தானந்தமயி

கொல்லம், செப். 28: பசுமையான, தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மாதா அமிர்தானந்தமயி வலியுறுத்தினார்.
மாதா அமிர்தானந்தமயியின் 57-வது பிறந்தநாள் விழா கேரள மாநிலம் கொல்லம், வல்லிக்காவில் உள்ள அமிர்தபுரி ஆசிரமத்தில் திங்கள்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாதாவின் பிறந்தநாளையொட்டி அவரிடம் ஆசிபெறுவதற்காக நாடு முழுவதிலிமிருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு குழுமியிருந்தனர்.
தனது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பிறகு பக்தர்களுக்கு ஆசி வழங்கி அவர் சிறப்புரையாற்றினார்.
நாடு முழுவதும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் பொது கழிப்பிட வசதியை ஏற்படுத்த மாதா அமிர்தானந்தமயி மடம் திட்டமிட்டுள்ளதாக அவர் அப்போது தெரிவித்தார். தனது சொற்பொழிவின்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து அவர் மேலும் பேசியதாவது:
அமிர்தானந்தமயி மடம் சார்பில் பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நடவடிக்கையாக பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் தூய்மையைப் பேணிகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக பள்ளிகளில் குழுக்களை அமைத்து அதன் மூலம் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். சுற்றுப்புறத் தூய்மையைப் பேணிக்காப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள மடத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் பிரசாரம் மேற்கொள்வர்.
பள்ளி மாணவர்களுக்கு தூய்மையைப் பேணுவதற்காக துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையிலான 10 லட்சம் டவல்கள் வழங்கப்படும்.
நாடு முழுவதும் தூய்மையை பேணுவதற்காக பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்வதுடன் அதற்காக சிறப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான தங்குமிடங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் வேதனையளிக்கிறது. நமது நாட்டின் சுகாதாரமற்ற நிலையை வெளிநாட்டு ஊடகங்கள்  சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவதூறாக பிரசாரம் செய்துவருகின்றன. அவற்றை முறியடிக்க போர்க்கால அடிப்படையில் நாம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் பக்தர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் மாதா அமிர்தானந்தமயி பதில் அளித்தார். ஆன்மிகத்தை உணர்வுப்பூர்வமாக ஏற்று செயல்பட வேண்டும். பணம் மற்றும் புகழால் ஆன்மிகத்தை முறியடிக்க முடியாது. எந்த ஒரு பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய அமைச்சர்கள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், குருதாஸ் காமத், மாநில அமைச்சர்கள் கே.வி.தாமஸ், சி.திவாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மடத்தின் சார்பில் இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இது 9 பிராந்திய மொழிகளில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

0 comments: