வரலாற்றுச் சின்னங்களை காத்திடுங்கள்: மன்மோகன் சிங்

புது தில்லி, செப்.27: தில்லியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை காத்திடுங்கள் என்று மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து அவற்றைப் போற்றுவது மக்களின் தலையாய கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பாக இந்திய தொல்லியல் துறை புத்தகம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த புத்தகத்தை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டு பேசுகையில் மன்மோகன் சிங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: உலகத்தில் பாரம்பரியமிக்க நகரங்களில் தில்லியும் ஒன்று. சரியாக சொல்வதென்றால் தில்லி ஒரு வாழும் அருங்காட்சியகம். இப்படி கலாசார முக்கியத்துவம் வாய்ந்த தில்லி நகர் நவீன நகராக மாறி வருகிறது. இந்த தருணத்தில் மக்கள் கவனமாக இருத்தல் அவசியம். நவீனத்துக்காக தில்லியின் பாரம்பரியமிக்க கலாசாரத்தை விட்டுக்கொடுத்திட முடியாது.
தில்லி நகரையும், இங்குள்ள வரலாற்றுச் சின்னங்களையும் கட்டிக் காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. இந்திய தொல்லியல் துறைக்கு புத்துயிர் கொடுக்க கலாசார அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் இந்திய தொல்லியல் துறையின் செயல்பாடு மேம்படும். வரலாற்றுச் சின்னங்கள் கட்டிக்காக்கப்படும்.
தில்லியில் மொத்தம் 174 வரலாற்றுச் சின்னங்கள் இந்திய தொல்லியில் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் இந்த புத்தகத்தில் காமன்வெல்த் விளையாட்டு கிராமப் பகுதியில் உள்ள 46 வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய விவரம்தான் இடம்பெற்றுள்ளது.
தில்லியில் உள்ள அனைத்து வரலாற்றுச் சின்னங்கள் பற்றியும் புத்தகமாகத் தொகுத்து மக்களின் கவனத்துக்கு கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் வரலாற்றுச் சின்னங்களின் மாண்பை மக்கள் அறிந்து கொள்வார்கள். அவற்றைக் காக்க வேண்டும் என்ற உத்வேகம் அவர்களுக்கு தானாகவே வந்துவிடும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்

 

0 comments: