தேசியத்தை வலியுறுத்திய தெய்வக்கவி பாரதியார்: சுகி. சிவம்

காரைக்குடி, செப். 27: தேசியத்தை வலியுறுத்திய தெய்வக்கவி பாரதியார் என்று இலக்கியச் சொற்பொழிவாளர் சுகி.சிவம் கூறினார்.


சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதி தமிழ்ச் சங்க பொன் விழா கருத்தரங்கில் "தெய்வ விதி இஃதே' என்னும் தலைப்பில் அவர் பேசியதாவது:
"வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திருநாடு' என்று மகாகவி பாரதியார் பாடிய பாடலில் ஒரு முக்கியமான கருத்து புதைந்து கிடக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் அது தெரியாது. சற்று கூர்ந்து கவனித்தால் மட்டுமே புலப்படும். அக்கருத்தை அறியும்போது மகாகவி எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தப் பாடலில் முதலில் தமிழ் மொழி வாழவேண்டும் என்கிறார். பின்னர் தமிழர் வாழவேண்டும் என்கிறார். இவ்விரண்டும் தேசியத்துடன் இணைந்தாலே சிறப்பு என்பதையும் வலியுறுத்துகிறார்.
நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னால் தேசியக் கட்சிகள் மொழியை உதாசீனப்படுத்திவிட்டன. மாநிலக் கட்சிகள் தேசியத்தை கண்டுகொள்ளாமல் மொழிப்பற்றை மட்டுமே முன்னிறுத்தி வந்தன.
தேசியம் இல்லாத மொழிப்பற்று ஆபத்தானது. மொழிப்பற்று இல்லாத தேசியம் அபத்தமானது. ஆனால், பாரதி 100 ஆண்டுகளுக்கு முன்பே மொழிப்பற்றுடன்கூடிய தேசப்பற்றை வலியுறுத்தினார். அதை இப்போதுதான் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசியல் கட்சிகள் புரிந்துகொண்டுள்ளன.
பாரதி தொலைதூர சிந்தனைகளை உள்ளடக்கிய கவிஞர். பிறர் பார்வைக்கு சாதாரணமாகத் தெரிந்த கல்லை, ஒரு சிற்பி தன் கலைப்பார்வையுடன் சிலை வடிவம் கொடுப்பதுபோல உண்மைகளில் சிறைப்பட்டிருக்கும் வார்த்தைகளை கவிதைகளில் கொண்டுவந்தவர் பாரதியார்.
சிந்தனையாளர்கள் எல்லோரும் கவிஞர்களாக இருக்கமாட்டார்கள். கவிஞர்கள் எல்லோரும் சிந்தனையாளர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால், பாரதியார் இதற்கு விதிவிலக்காக சிந்தனைமிக்க கவிஞராக இருந்தவர்.
பாரதியின் கவிதைகளில் புதிய, புதிய வார்த்தைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் புதுப்புது அர்த்தத்தை தருவதாகவும் அமைந்துள்ளது. மகாகவிபாரதியின் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு; - தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்' என்கிற பாடலின் அர்த்தம் என்ன என்று நாம் யாராவது ஆழ்ந்து சிந்தித்திருக்கிறோமா? அதென்ன அக்கினிக் குஞ்சு? அந்த அக்கினிக் குஞ்சால் வெந்து தணியும் காடு என்பதென்ன?
ஒரு மனிதனுடைய மாற்றத்திற்கு ஏதாவது காரணம் தேவைப்படுகிறது. "எம்மைத் தொடாதீர்' என்று மனைவி சொன்ன வார்த்தை திரு நீலகண்டரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. தனது சகோதரியின் வார்த்தை அருணகிரிநாதரின் அகக் கண்களை திறந்தன. காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே...' என்கிற வார்த்தை பட்டினத்தாரை சித்தராக்கியது. "பொறி' தட்டுகிறது என்று சொல்கிறோமே, அந்த பொறிதான் பாரதி குறிப்பிடும் "அக்கினிக் குஞ்சு'. "வெந்து தணியும் காடு' என்பது மனதில் மண்டிக் கிடக்கும் அஞ்ஞான இருள். அந்த அஞ்ஞான இருள் மறையும்போது ஏற்படும் பேரின்பத்தைக் குறிக்கும் ஆனந்தக்கூத்தைத்தான் பாரதி "தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்' என்று குறிப்பிடுகிறார். பாரதி மனிதனோ கவிஞனோ மட்டுமல்ல, அவர் ஒரு சித்த புருஷனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பது புரிகிறது.
மகாகவி பாரதி நம்பினார், உலகம் தன்னால் உய்விக்கப்படும் என்று. தான் உலகுக்குப் புதுச் செய்தியொன்றை அளிக்கப் பிறந்தவன் என்று உணர்ந்தார். இல்லையென்றால், "எந்தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்' என்றும், "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்நாட்டில்' என்றும் பாடியிருப்பாரா?
பிரபஞ்சத்தின் முழுமையை உள்வாங்கிக் கொண்டவரே தெய்வத்தன்மை வாய்ந்தவர். அத்தகைய சக்தியை பாரதியார் பெற்றிருந்தார் என்றார் சுகி. சிவம்

 

0 comments: