"20 வயது முதல் 40 வரை உள்ளோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது

கோவை : "20 வயது முதல் 40 வரை உள்ளோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இருதய நோய் வராமல் காக்க உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவசியம்,'' என, அப்போலோ மருத்துவமனை டாக்டர் செங்கோட்டுவேலு தெரிவித்தார்.

உலகமெங்கும் சர்வதேச இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை அப்போலோ மருத்துவமனை முதுநிலை இண்டர்வென்ஷனல் இதய நோய் டாக்டர் செங்கோட்டுவேலு கூறியதாவது: இந்தியாவில் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. புகைபிடித்தல், சர்க்கரை சத்து பற்றி விழிப்புணர்வு இல்லாததால், இதயம் பாதிக்கிறது; உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது. ஒரு நாளில் பாதி நேரம் அலுவலக பணியில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படுகிறது. பணியுடன், உடலையும் பேணுதல் அவசியம். மன உளைச்சல், வேதனை, கவலை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்தல், போட்டி, பொறாமை போன்ற பல்வேறு பிரச்னை, சோதனைகளை சந்திக்க நேரிடும் போது இதயம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

இருதய நோய் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இங்கு இல்லை. எனவே, அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர் இதயம் பாதித்தவர்கள் இந்தியாவில் இருப்பர். 2020ல் சர்க்கரை நோய் பாதிப்பில் அதிகம் பேர் இந்தியாவில் இருக்க வாய்ப்புள்ளது. மருத்துவ, மருந்து வசதிகள் 40 ஆண்டுகளாக சிறப்பாக இருந்தாலும், விழிப்புணர்வு இல்லாமை, உடலை சரிவர பேணாமல் இருப்பது ஆபத்தின் அறிகுறியாக உள்ளது. புகை பிடித்தல், மது அருந்துதல், கொழுப்பு, எண்ணெய் சத்து நிறைந்த பொருட்களை உண்ணுதல், சரிவர தூக்கமின்மை போன்றவற்றால் உடல் நலம் பாதிக்கும். பள்ளி பருவத்திலிருந்தே உணவு கட்டுப்பாட்டுடன், நடை- உடற்பயிற்சியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். உடற்பயிற்சி, சிறந்த மருந்து; 40 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், கீரைகள் அதிகமாக சேர்க்க வேண்டும். இவ்வாறு, டாக்டர் செங்கோட்டுவேலு தெரிவித்தார்.

 

0 comments: