சீன தொலைத்தொடர்பு நிறுவனம் தமிழகத்தில் 2,300 கோடி முதலீடு

சென்னை, செப்.29: சீன தொலைத்தொடர்பு நிறுவனம் ஹுவாய் சென்னை அருகே  2,300 கோடி முதலீட்டில் தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர் நிலைக் குழு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஷாங்காய் நகரில் தமிழகக் குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க அவர்கள் ஆர்வம் தெரிவித்தனர். இதை வரவேற்ற மு.க. ஸ்டாலின், இந்தத் தொழிற்சாலை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ரூ.2,300 கோடி முதலீட்டில் அந்தத் தொழிற்சாலையை சென்னைக்கு அருகில் அமைக்க உள்ளதாக ஹுவாய் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
முதல் இயந்திரம்: ஷாங்காய் நகரத்துக்கு அருகில் உள்ள பொருளாதார மண்டலத்தில் கோவையைச் சேர்ந்த லஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனம் புதிய தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் இயந்திரத்தின் விற்பனையை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், லஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு மற்றும் சீன அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஷாங்காய் கண்காட்சி: சீனாவின் ஷாங்காய் நகரத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ரோபோ, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சிக்கு சென்ற தமிழகக் குழுவினர், ஜப்பான், சீனா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்டனர்.

 

0 comments: