கோவை வேளாண் பல்கலை புராதனச் சின்னமாக அறிவிப்பு!

கோவை: கோவையின் புராதன சின்னமாக வேளாண் பல்கலையின் ஆராய்ச்சிக் கட்டடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை நூற்றாண்டு பெருமை வாய்ந்தது, விவசாயத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இப்பல்கலை, தற்போது புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கலை மற்றும் கலாசார அறக்கட்டளையின் கோவை கிளை (இன்டாக்) சார்பில் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான விழா நேற்று நடந்தது. இதில், சான்றிதழை "இன்டாக்" கன்வீனர் ராஜ்குமார் வெளியிட்டார். நினைவுச் சின்ன கல்வெட்டை கோவை மேயர் வெங்கடாசலம் திறந்து வைத்தார்.


வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி பேசியதாவது:

"300 அடி நீளம், 50 அடி உயரம் கொண்ட இக்கட்டடம் 1906ல் கட்டப்பட்டது. இப்பகுதியில் உருவாக்கிய செங்கல், கிரானைட் கற்களால் 4.70 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டடப்பட்டுள்ளது. வெளியில் இந்திய கலாசாரத் தோற்றத்தையும், உள்ளே ஆங்கிலேயர் கால கட்டட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. கோவைக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே இக்கட்டடம் பொக்கிஷம். இந்த அபூர்வ கட்டடம் அழிந்து விடாமல் பாதுகாக்க, பல்கலை நிர்வாகம் பல்வேறு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டடத்தின் தரைக்கு விரைவில் கிரானைட் கற்கள் பதிக்கப்படும். கூரையும் புதுப்பிக்கப்படும்" என்றார்.


கலெக்டர் உமாநாத் பேசுகையில், "கோவை வேளாண் பல்கலை கட்டடம் போன்ற புராதன கட்டடங்கள், நமது முன்னோர் கட்டடக் கலையில் சிறந்து விளங்கியதை உணர்த்துகிறது. கட்டடங்கள்தான் ஒரு நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக புராதன கட்டடங்களை பாதுகாக்க மத்திய அரசு நிறைய நிதி ஒதுக்கி வருகிறது. ஜெர்மனியில் புராதன கட்டடங்களை பாதுகாக்க சட்டமே உள்ளது. நம் நாட்டிலும் அது போன்ற சட்டங்கள் வர வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறைக்கு புராதன கட்டடங்களை பத்திரமாக விட்டுச் செல்ல முடியும்" என்றார். புராதன சின்ன புகழ் பெற்றுள்ள பல்கலையின் ஆராய்ச்சிக் கட்டடத்தை, ஓவியமாக வரையும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


'புராதனச் சின்னம்' கிடைத்தது எப்படி?: பல்கலையின் மனிதவள மேம்பாட்டுத் துறை பேராசிரியர் சிவா மற்றும் இன்டாக் கன்வீனர் ராஜ்குமார் கூறுகையில், ""பொருளாதாரம், கலாசாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பிணைப்பதாக கட்டடம் அமைந்துள்ளதாலும், கல்வி, சுற்றுலா, வேலை, கலாசாரம், சுற்றுச்சூழல், உணவு பாதுகாப்புக்கு உதவுவதாகவும் அமைந்துள்ளதாலும், பல்கலையின் ஆராய்ச்சிக் கட்டடம் "கோவையின் புராதன சின்னமாக' தேர்வு பெற்றது. இதன் காரணமாகவே ஏர்- இந்தியா நிறுவனம், ரயில்வே டைரக்டரி, டெலிபோன் டைரக்டரி ஆகியவற்றில் கோவையை குறிக்க பல்கலை கட்டட படம் இடம் பெற்றுள்ளது'' என்றனர்.

 

0 comments: