வளர்ச்சிப் பாதையிலா இந்திய கல்வி?

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பட்டப்படிப்பில் சேருகின்றனர்.

வரும் 2013க்குள், குறைந்தபட்சம் 15 சதவீதமாவது உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைய, மத்திய அரசு முயற்சிக்கிறது. தொடக்கப் பள்ளிகளில் 22 கோடி குழந்தைகள் சேர்கின்றனர். ஆனால், மேல்நிலைப் பள்ளியை அடைவதற்குள், 50 சதவீத பேர் தங்களின் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.


இனிமேலும் இந்த நிலை வரக் கூடாது என்பதால் தான், தனியார் துறையினரும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும்; தரமான கல்வியை தர வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. பொதுவாக ஒரு கல்லூரி சிறப்புற, மேன்மையுற 10 ஆண்டுகள் தேவைப்படும். எல்லா நிலையிலும் சிறப்பு தகுதிகளை பெற்றிருக்கும் பட்சத்தில், மத்திய அரசின், என்.பி.ஏ., போன்ற அமைப்புகளில் தரச்சான்றிதழ் பெற்றிருக்கும் பட்சத்தில் தான், தன்னாட்சி அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக் கழக குழு வழங்க முடியும்.


10வது ஐந்தாண்டு திட்டத்தின் பரிந்துரைப்படி, அப்போது இருந்த 20 ஆயிரத்து 760 கல்லூரிகளில், 10 சதவீதம் கல்லூரிகள், அதாவது, ஏறத்தாழ 2,000 கல்லூரிகள், தன்னாட்சி அந்தஸ்து பெற்றிருக்க வேண்டும்.ஆனால், அப்போது 281 கல்லூரிகள் தான் தன்னாட்சி அந்தஸ்து பெற்றன. நம் நாட்டில் தற்போது, 350 பல்கலைக்கழகங்கள் உள்ளன. வரும் ஆண்டில் 1,750 பல்கலைக்கழகங்கள் தேவைப்படுகின்றன.


தனியார், சுயநிதி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் இருக்கும் வசதிகள், அரசு பல்கலைக்கழகங்களில் பலவற்றில் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கக் கூட ஆய்வு வசதிகள் இல்லை. ஒரு காலத்தில் தளர்ந்து போயிருந்த சீனா, இன்று அதிகளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து வருவதை பார்க்கும் போது, கவலை கொள்ள நேரிடுகிறது. 1980ல், 10 ஆயிரத்து 606 ஆய்வுக் கட்டுரைகளை இந்தியா சமர்ப்பித்த நேரத்தில், சீனாவின் வெளியீட்டு தொகை 892 மட்டும் தான். 2005ம் ஆண்டில் இந்தியா 25 ஆயிரத்து 227 ஆய்வியல் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் போது, சீனா 72 ஆயிரத்து 362 கட்டுரைகளை சமர்ப்பித்தது.


எப்படி 25 ஆண்டுகளில் இந்த ஏற்றம் சீனாவுக்கு வந்தது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி 23.2 சதவீதத்தை எட்டும் போது, இந்தியாவின் ஒட்டுமொத்த பதிவு விகிதாச்சாரம் 11 சதவீதத்தை மட்டும் தான் எட்டியது. கல்வியில் உயர்தரம் என்ற நிலையில் போட்டி போட வேண்டும்.இப்படி போட்டி போடாத காரணத்தால், 2005ல் சத்திஸ்கர் மாநிலத்தில் 112 பல்கலைக்கழகங்கள் ஒரே ஆண்டில் துவக்கப்பட்டு, கல்வி நிலை சீரமைக்கப்படவில்லை என, அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.


அதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் அப்படிப்பட்ட வறிய நிலை உருவாகவில்லை என்றாலும், கல்வி நிலை உயர்ந்த, அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர் என, ஒரு சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது சமீபத்தில் மைய அரசு கமிட்டி குற்றம் சாட்டியது. எனவே, தமிழகத்தை பொருத்தவரையில், 100 சதவீத தனியார் பல்கலைக்கழகங்கள் மானியம் பெறாதவை, சுயநிதியில் நடத்தப்படுபவை. நினைத்த மாத்திரத்தில் மாணவர்கள் நலன் கருதி உரிய உபகரணங்களை வாங்கி வைப்பர், கட்டடங்கள் தனித்தனியாக பிரமிக்கத்தக்க வகையில் கட்டி முடித்து விடுவர்.


தேர்ச்சி பெற்ற மாணவர் சதவீதமும் பாராட்டத்தக்க வகையில் உள்ளன. ஆனால், வட மாநிலங்களில் காங்கிரி விஸ்வ வித்யாலயா போன்ற பல்கலைக்கழகங்கள் ஏறத்தாழ 44 கோடி ரூபாயில் மானியத் தொகை மத்திய அரசிடம் பெற்றும் கூட, (40 ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற இவர்கள்) அடிப்படை வசதிகளை, ஏற்றங்களை இன்று வரை ஏன் உருவாக்கவில்லை என, மத்திய அரசு வினவியுள்ளது.


இன்றைக்கு 6ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி முறையை தமிழக அரசு ஆரம்பக் கட்ட நிலையாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதை செயலாக்கப்படும் போது கல்வியின் தரம், ஏற்கனவே இருந்த நடைமுறை அல்லது தரம், இவற்றிலிருந்து குறைந்து போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.இங்கே தான் செயல்முறை சிக்கல்கள் உள்ளன. ஒரு பக்கம் மத்திய அரசு பாடத்திட்டம், மறுபக்கம் மாநில அரசு பாடத்திட்டம் என, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டக் கல்வித் தரம் என்ற நிலை, தற்போது உருவாகியுள்ளது.


பல தொழிற்சாலை நிர்வாகிகள் மாணவர்களின் கல்வி நிலை அங்கீகாரம் பெற்றதா அல்லது மேனிலை பெற்றுள்ளதா என்பதை விட சிறந்த பயிற்சியாளர்களாக, களத்தில் பண்பட்டவர்களாக கல்விக்கூடத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றனரா என்பதை தான் பார்க்கின்றனர்.பொறியியலை பொறுத்தவரையில், நம் இந்திய மாணவர்கள் பெருமளவில் பணி வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால், மருத்துவ மாணவர்களுக்கு இவ்வாய்ப்பும், சதவீதமும் குறைகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக டாக்டர்கள் எண்ணிக்கை, அவர்களின் சேவை, இந்தியாவிற்கே அதிகமாக தேவைப்படுகிறது.


இந்நிலையில், ஒருவரை ஒருவர் குற்றம் காண்பதை விட்டு விட்டு, சீர் செய்யும் வழிமுறைகளை ஆய்ந்து செயல்படுத்துவது ஒன்று தான் சிறந்த வழிமுறை. அப்படியானால், உயர்கல்வி முடித்தோர் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதா? ஏறத்தாழ ஆறு கோடி பட்டதாரிகள், இன்றளவும் இந்தியாவில் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலை தேடுவோர், 70 லட்சம் பேரை தொடுகிறது. இவர்கள் அரசு மற்றும் வங்கி உதவியுடன் எண்ணற்ற நிறுவனங்கள், உற்பத்தி அமைப்புகளை உருவாக்க முடியும்.


பொருளாதார ஏற்றம் மற்றும் வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்றால், பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடத்தும் கல்வி நிபுணர்கள் குழுவில் தொழில் அதிபர்கள் கூட இடம் பெற வேண்டும். மாறிவரும் கலாசாரம், புதுமை நிறைந்த பாடத் திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் பயிற்சி தர வேண்டும். அரசு கல்லூரிகளில் நிரப்பப்படாத பேராசிரியர் பதவிகள் நிரப்பப்பட வேண்டும்.


மாணவர்களுக்கு கல்வி பயிற்சி, திறனுடன் பேசும் ஆங்கிலமொழி பயிற்சி, பொது அறிவு, நடைமுறை வாழ்க்கையில் பழகும் பாங்கும் இடையறாது பயிற்றுவிக்கப்பட வேண்டும். ‘அடுத்த ஐந்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்’ என, மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடு மட்டுமல்ல; பேரறிவு படைத்த புதிய இந்தியா என்ற நிலை, இனி வரும் நாட்களில் உறுதிப்படும்.


- பத்மநாதன், கல்வியாளர்

 

0 comments: