குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு: டில்லி மாநில மக்களிடம் அமோகம்

புதுடில்லி: டில்லியில் வசிக்கும் தம்பதியினரில் பெரும்பாலானோர், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விரும்புவது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறிய அளவிலான குடும்பமே, சீரான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும் என்ற விழிப்புணர்வு அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு டில்லியில் பிறந்த குழந்தைகள் பற்றிய பதிவுகளை, டில்லி மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், கடந்தாண்டில் மட்டும் 3.54 லட்சம் குழந்தைகள் பிறந்ததாகவும், இதில் 1.85 லட்சம் குழந்தைகள் ஆண்கள் என்றும், 1.69 லட்சம் குழந்தைகள் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த 3.54 லட்சம் குழந்தைகளில் வெறும் 2.79 சதவீதம் குழந்தைகள் மட்டுமே, தங்களின் பெற்றோருக்கு நான்காவது குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் கடந்தாண்டில் 86 சதவீதம் தம்பதியினர், இரண்டு குழந்தைகளுக்கு மேல், தங்களுக்கு வேண்டாம் என, முடிவு செய்துள்ளனர். 53 சதவீதம் தம்பதியினர், ஒரு குழந்தை மட்டும், தங்களுக்கு போதும் என, முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து டில்லி மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் அசோக்குமார் வாலியா கூறுகையில்,"டில்லி மக்களிடையே, தற்போது சிறிய குடும்பத்தை அமைத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  அளவான குடும்பமே, தங்கள் எதிர்காலத்துக்கு நல்லது என, பெரும்பாலானோர் முடிவு செய்துள்ளனர். கடந்த 1991ல் வெளியான புள்ளிவிவரப்படி,  19.7 சதவீதம் தம்பதியினர், நான்கு குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டனர். தற்போது அது, 2.7 சதவீதமாக குறைந்துள்ளது'என்றார். இந்திய மருத்துவ அறிவியல் மைய அதிகாரி பீர் சிங்  கூறுகையில், "டில்லி நகர மக்கள், தங்களின் வருவாயைக் கொண்டு, எத்தகைய குடும்பத்தை அமைத்துக் கொள்ளலாம் என, சிந்திக்க துவங்கிவிட்டனர். இதன் வெளிப்பாடு தான், தற்போது வெளியாகியுள்ளது.  "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை, குடும்ப கட்டுப்பாடு குறித்து, பெரிய அளவில் விழிப்புணர்வு  ஏற்படவில்லை. தற்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

 

0 comments: