பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கவுன்சிலிங்

கோவை : பள்ளி வாகனங்கள் விபத்துக் குள்ளாவதை தடுக்க, கோவை மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் வாகன ஓட்டுனர்களுக்கு உணர்வு ரீதியான கவுன்சிலிங் அளிக்க, மெட்ரிக் பள்ளிகள் கல்விக்குழு முடிவு செய்துள்ளது.
பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர்களை ஏற்றி வர சொந்த வாகனங்களை இயக்குகின் றன. இவற்றை இயக்கும் ஓட்டுனர்களில் சிலர் முறையான முன் அனுபவம் பெற்றிருப்பதில்லை. டெம்போ வேன், கால்டாக்சிகளை ஓட்டிய பலர் பள்ளி வாகனம் ஓட்டும் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் மட்டுமே வேலை; கல்வித் தகுதி அதிகம் இல்லை. குறைந்த சம்பளம் அளித்தால் போதும். எனவே, சம்பள பற்றாக் குறைக்காக பள்ளி வாகனம் ஓட்டும் பணிக்குப் பின் சிலர் இரவில் கால் டாக்சி, லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு பணிக்கு செல்கின்றனர். ஓய்வு எடுக்காமல் மீண்டும் காலையில் பள்ளி வாகனங்களை இயக்குவதால், விபத்துக்கு காரணமாக அமைகிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் பள்ளி வாகனம் மோதி மாணவன் இறந்த சம்பவம் மற்றும் பள்ளி வாகனங்கள் சிறு விபத்துக்களில் சிக்க, இது போன்ற பின்னணிகள் காரணமாக அமைந்து விடுகின்றன.

கோவை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க, மெட்ரிக் பள்ளிகள் கல்விக்குழு புதிய திட்டம் வகுத்துள்ளது. இது குறித்து கோவை, நீலகிரி மாவட்டங்களின் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் இளங்கோ கூறியதாவது: தனியார் பள்ளிகளில் மாணவர்களின் படிப்புக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க, ஓட்டுனர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுனர்களின் கவனக் குறைவால்தான் பெரும்பாலான பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதனால் மாணவர்களை பொறுமையாக வாகனத்தில் ஏற்றுவது, அவர்கள் இறங்கும் வரை பொறுமையை கடைபிடிப்பது, வாகனத்தை இயக்க வேண்டிய வேகத்தின் அளவு, குழந்தைகளை கையாள வேண்டிய விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உணர்வு ரீதியாக கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுனர்களை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பள்ளி நிர்வாகிகளுக்கும் சில குறிப்புகள் அளிக்க முடிவு செய்துள்ளோம். கவுன்சிலிங்குக்கான ஏற்பாடுகளை மெட்ரிக் பள்ளிகள் கல்விக்குழு செய்து வருகிறது. இவ்வாறு, இளங்கோ கூறினார்.

 

0 comments: