இதய நோய் பாதுகாப்பு திட்டத்தில் 8ம் வகுப்பு படித்த பெண்களுக்கு வேலை

சிவகாசி : கிராமங்களில் எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு, இதய நோய் பாதுகாப்பு திட்டத்தில் கணக்கெடுக்கும் வேலை வழங்கப்பட உள்ளது.

விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2007ல் உலக வங்கி நிதி உதவியுடன், இதய நோய் பாதுகாப்பு முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களுக்கு உயரம், எடை சரிபார்த்தல், ரத்த அழுத்தம் சோதனையில் இதய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 35 சதவீத மக்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் "இதய நோய் பாதுகாப்பு திட்டம்' என செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதை செயல்படுத்த முதல் கட்டமாக அனைத்து கிராமங்களிலும் எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கணக்கெடுப்பாளர்களை கிராமம் வாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு பொது சுகாதார துறை மூலம் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்கு பின் 100 முதல் 200 வீடுகள் வரை கணக்கெடுக்க, ஊக்க தொகை வழங்கப்பட உள்ளது. இவர்கள் வீடு, வீடாக சென்று 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர். இதில் இதய நோய், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் எத்தனை பேர், பாரம்பரிய அடிப்படையில் நோய் வந்துள்ளதா? 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் உயரம், இடுப்பு சுற்றளவு அளவீடு செய்தல், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற விபரங்களை சேகரிக்க உள்ளனர். ஆய்வில் நோயாளிகள் கண்டறியப்பட்டால், அவர்கள் அருகில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

 

0 comments: