9 விஞ்ஞானிகளுக்கு சாந்தி ஸ்வரூப் விருது

புது தில்லி, செப்.26: 9 விஞ்ஞானிகள் இந்த ஆண்டுக்கான சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேரில் 3 பேர் பெண்கள். இந்த விருதுக்கு ஒரே நேரத்தில் 3 பேர் பெண்கள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இவர்கள் செய்த சாதனையை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலால் (சிஎஸ்ஐஆர்) அளிக்கப்படும் இந்த விருது,  5 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரத்தை உள்ளடக்கியது.
இந்த ஆண்டின் இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங், 9 பேருக்கும் விருதை அளித்து கெüரவிப்பார் என்று அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர் ஜெனரல் சமீர் பிரம்மச்சாரி தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் ஊரக மேம்பாட்டுக்கு உதவியாக இருந்ததற்கான விருதுக்கு ஃபரிதாபாதில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புவி, வளிமண்டலம், கடல், கோள்கள் பற்றிய அறிவியல், கணிதம் ஆகிய துறைகளுக்கான விருதுக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் சமீர் பிரம்மச்சாரி கூறினார்.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பெயர், சாதனை நிகழ்த்திய துறை (அடைப்புக்குறிக்குள்): பூனாவில் உள்ள தேசிய செல் ஆய்வு மையத்தில் பணிபுரியும் சஞ்சீவ் காலாந்தே, மும்பையில் உள்ள டாடா ஃபண்டமென்டல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் சுபா டோலே. (உயிரியல் துறை).
கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் பணிபுரியும் சந்தீப் வர்மா, பெங்களூரில் உள்ள நேரு அட்வான்ஸ்டு அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஸ்வபன் கே பட்டி. (ரசாயன அறிவியல்). பெங்களூரில் உள்ள இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் பணிபுரியும் ஜி.கே.அனந்தசுரேஷ், கொல்கத்தாவில் உள்ள இந்தியன் புள்ளியல் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரா பந்தோபாத்யாய. (பொறியியல் அறிவியல்).
தில்லியில் உள்ள உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மிதாலி முகர்ஜி. (மருத்துவ அறிவியல்).
பெங்களூரில் உள்ள நேரு அட்வான்ஸ்டு அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த உமேஷ் வாசுதேவ் வாக்மேர், மும்பையில் உள்ள டாடா ஃபண்டமென்டல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் கலோபரன் மைதி.(பருப்பொருள் அறிவியல்)

 

0 comments: