ஆயிரம் பேருடன் நடனம் நடனம் நிகழ்ந்தது எப்படி

தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று, நடனக் கலைஞர்கள் ஆயிரம் பேர் ஒரே மேடையில் நடனமாடினர். பெரிய கோவில் விழாவில் நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் விநாயகர் பாடல், கருவூர் தேவர் பாடல், ஆதிசங்கரர் பாடலுக்கு நடனமாடினர். பெரிய கோவில் நந்தி மண்டபத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட விரிப்பு ஒட்டப்பட்டு, அதில் கலைஞர்களும் ஒரே மேடையில் நின்று நடனமாடினர்.
பத்மா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா உலகம் போற்றும் விழா. இங்கு ஒரே இடத்தில் ஆயிரம் கலைஞர்கள் நடனமாடுவது பெருமைக்குரியது. ஒரே மேடையில் ஆயிரம் பேர் ஆட முடியுமா? என பலருக்கு சந்தேகம் எழுந்தது. ஒரே அழைப்பில் அனைவரும் ஏற்று, "சிடி' மூலம் அனைத்து கலைஞருக்கும் அனுப்பி பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
அதற்காக கருவூர் தேவர் பாடல்களைத் தொகுத்து நடனம் அமைத்தோம். ஒத்திகை கூட பார்க்காமல் இங்கு பிரமாதமாக நிகழ்த்தியுள்ளோம். ராஜராஜ சோழன் நாட்டியக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல, இங்கு நாட்டியம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதுவும், பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் இந்நிகழ்ச்சி நிகழ்த்தப்படுவது மேலும் பெருமைக்குரியது. அதற்கு அரசு பெரும் பாலமாக இருந்துள்ளது. இவ்வாறு பத்மா சுப்ரமணியம் கூறினார்.

 

0 comments: