லஞ்ச ஊழலை தடுக்க "ஹாட்லைன்' வசதி

புதுடில்லி : அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலைத் தடுக்கும் வகையில், மத்திய கண்காணிப்பு கமிஷன் அலுவலகத்துடன் உடனடியாக இணைக்கும், "ஹாட்லைன்' வசதி விரைவில் ஏற்படுத்தப்படுகிறது.


மத்திய கண்காணிப்பு ஆணையரக அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு அலுவலகங்களுக்கு தங்களது பணி நிமித்தமாக வரும் பொது மக்களிடம் அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தடுக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் ஹாட்லைன் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான கால் சென்டர் அமைக்கப்பட்ட பின், கண்காணிப்பு ஆணையரக அலுவலகத்துடன், ஹாட்லைன் இணைப்பு, சம்பந்தப்பட்ட துறையுடன் இணைக்கப்படும். இதில் தெரிவிக்கப்படும் புகார்கள் உண்மையானது தானா என்பது சரிபார்க்கப்பட்டு, அவ்வாறு உண்மையாக இருப்பின், சம்பந்தப்பட்ட ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. அதுபோலவே, அரசியல் கட்சிகளால் பல்வேறு வகைகளில் பெறப்படும் தொகை குறித்த விவரங்களை வெளியிடுவது மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை பெறுவது, வரவு-செலவு கணக்குகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது குறித்தும் மத்திய ஊழல் தடுப்பு துறை பரிசீலித்து வருகிறது.


இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து, "தேசிய ஊழல் தடுப்பு வழிமுறை'களை செயல்படுத்த மத்திய கண்காணிப்பு ஆணையம் முனைப்பாக உள்ளது. இது தொடர்பாக திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழலை தடுப்பதில் அரசு மட்டுமின்றி, அரசியல் கட்சிகள், நீதித்துறை, பத்திரிகைகள், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவையும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பெயரளவுக்கு இல்லாமல், நடைமுறைக்கு வரவேண்டும் என்பதில், மத்திய கண்காணிப்பு ஆணையம் உறுதியுடன் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

0 comments: