சர்வதேச தர வரிசை பட்டியலில் பின்தங்கிய இந்திய பல்கலைகள்

புதுடில்லி: சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட தர வரிசை பட்டியலில், இந்திய பல்கலைக் கழகங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன. முதல் 200 இடங்களில், ஒரே ஒரு இந்திய கல்வி நிறுவனம் மட்டுமே இடம் பிடித்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த குவாக்குரேலி சைமண்ட்ஸ் (க்யூ.எஸ்.,) என்ற நிறுவனம் சர்வதேச அளவில், கல்வி நிறுவனங்களின் தரத்தை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து, தர வரிசை பட்டியல் வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான தர வரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்திய பல்கலைக் கழகங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன.புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கல்வியின் தரத்தை வைத்து நடத்திய மதிப்பீட்டில், அது 100 மதிப்பெண் பெற்றுள்ளது. தர வரிசையின் முதல் 50 இடங்களில், சீனாவைச் சேர்ந்த நான்கு கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், முதல் 200 இடங்களில், இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு கல்வி நிறுவனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 163வது இடத்தில் இருந்த பாம்பே ஐ.ஐ.டி., தற்போது 183வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய பல்கலைக் கழகங்கள் முதல் 500 இடங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளன. தர வரிசைக்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பெண்களில்,  முதல் 50 இடங்களைப் பிடித்த பல்கலைக் கழகங்கள் சராசரியாக 75 முதல் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தன.  இந்திய பல்கலைக் கழகங்கள் சராசரியாக 30 முதல் 48 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தன. இந்தியாவின் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.,) பல்வேறு பிரிவுகளிலும் பின்தங்கின. ஊழியர் மற்றும் கல்வி சதவீதம் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளில், அவை மிகவும் பின்தங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

0 comments: