பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக ஒரு கோடி துணி பை சுற்றுச்சூழலை பாதுகாக்க "உபாசனா' அதிரடி

புதுச்சேரி : பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆரோவில்லில் உள்ள "உபாசனா' நிறுவனம் "ஸ்மால் ஸ்டெப்ஸ்' என்ற பெயரில் ஒரு கோடி துணி பைகளை தயாரித்து இலவசமாக வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புவி வெப்பம் அடைவதைத் தடுக்க, உலகம் முழுவதும் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க வலியுறுத்தி அரசு மற்றும் சமூக நல அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதற்கு மாற்று முயற்சியாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் உள்ள "உபாசனா' என்ற தொண்டு நிறுவனம் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை தயாரித்து இலவசமாக வினியோகம் செய்து வருகிறது. இதுவரை மொத்தம் 5 லட்சம் துணிப்பைகள் தயாரித்து உள்நாடு, வெளி நாட்டில் உள்ள பள்ளி மற்றும் அமைப்புகளுக்கு வினியோகம் செய்துள்ளது. இந்த துணி பைகளை "மொபைல் போன்' சைசில் சுருக்கி வைத்துக் கொள்ளலாம். தேவையான இடங்களில் துணிப்பையை பெரிதாக்கி பொருட்களை வைத்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உபாசனா நிறுவன திட்ட இயக்குனர் உமா கூறியதாவது: பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் பூமிக்குள் மழை நீர் செல்வது தடுக்கப்படுகிறது. இந்தியாவில் தினந்தோறும் 1 லட்சம் டன்னுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள் தேக்கம் அடைகின்றன. இதனைத் தடுக்க ஒரே வழி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது தான். எதிர்கால தலைமுறையினர் இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, துணி பைகள் பயன்படுத்தும் வகையில் நாங்கள் "ஸ்மால் ஸ்டெப்ஸ்' என்ற பெயரில் இரு வகையான துணி பைகளை தயாரித்து வருகிறோம். இந்த பையில் எட்டு கிலோ வரை பொருட்களை வைக்கலாம்.  ஆரோவில்லைச் சுற்றியுள்ள 14 கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, துணி பைகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்துள்ளோம். அவர்கள் பைகளை தயாரித்து, எங்களிடம் தருகின்றனர். இதுவரை தயாரித்த பைகளை பள்ளி மாணவர்கள், வெளி நாடுகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். ஒரு சில நிறுவனங்கள் தொழிலாளிகளுக்கு "கிப்ட்' கொடுக்கவும் இந்த துணி பைகளை வாங்கிச் செல்கின்றன. இதற்காக யாரிடமும் நன்கொடை எதுவும் பெறுவதில்லை. அடுத்த தலைமுறைக்குள் ஒரு கோடி அளவில் துணி பைகளை தயாரிக்க உள்ளோம். இவ்வாறு உமா கூறினார்.

 

0 comments: