7,000 பேருக்கு விரைவில் கம்ப்யூட்டர் பயிற்சி! - திருச்சி கலெக்டர் தகவல்.

திருச்சி: "திருச்சி மாவட்டத்தில் தனியாருடன் இணைந்து 7,000 பேருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி விரைவில் அளிக்கப்படும்'' என்று மாவட்ட கலெக்டர் சவுண்டையா பேசினார்.

பாரதிதாசன் பல்கலை மகளிரியல் துறை, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் ஆகியவை இணைந்து பெண்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி 45 நாட்கள் நடந்தது. பயிற்சி நிறைவு விழா நேற்றுமுன்தினம் காஜாமலை வளாகத்தில் உள்ள மகளிரியல் மையத்தில் நடந்தது. விழாவில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் சவுண்டையா வழங்கினார்.

விழாவில், பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசும்போது, "மகளிரியல் மைய கட்டிடத்தில் வெளியூர் பெண்களும் தங்கி தொழில் முனைவோர் பயிற்சி பெறும் வகையில் தங்கும் விடுதி ஏற்பாடு செய்துதர வேண்டும்'' என்று கலெக்டர் சவுண்டையாவை கேட்டுக் கொண்டார்.

நிறைவு விழாவில் திருச்சி கலெக்டர் சவுண்டையா பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக்குழு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சிகளும் மகளிருக்கு நடத்தி வருகிறோம். ஆனால் பயிற்சி மட்டும் அளிப்பது போலத்தான் தெரிகிறது. பயிற்சி அளிப்பது முக்கியமல்ல. இந்த பயிற்சி மூலம் எத்தனை பேர் தங்களது பொருளாதார நிலையில் மேம்பாடு அடைந்துள்ளனர் என்பது தான் முக்கியம். மகளிரியல் மையம் மற்றும் மாவட்ட நலக்குழு ஆகியவை இணைந்து கடந்த ஆண்டு வரை எத்தனை பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அதில், எத்தனை பேர் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளனர், எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்ற விபரங்களை பட்டியலிட வேண்டும். அப்போது தான், பயிற்சி அளிப்பதில் உள்ள நல்லது, கெட்டதை பரிசீலித்து, தேவையற்ற பயிற்சிகளை தவிர்த்துவிட்டு, தேவையான பயிற்சி அளிக்க முடியும். திருச்சி மாவட்டத்தில் விரைவில் தனியார் துறையுடன் இணைந்து 7,000 பேருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் 60 சதவீத்துக்கு மேல் பெண்களாக இருப்பர். இந்த பயிற்சிகளை கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும்.

வங்கிகளும் மகளிருக்கு 2,000 முதல் 3,000 கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்கியுள்ளது. வங்கிகள் அளிக்கும் நிதியும் பெண்களின் வாழ்க்கையில் எவ்வாறு பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது என்பதை உற்று நோக்கவேண்டும். மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் பயிற்சிகளால் தமிழகத்தில் பெண்களின் பொருளாதார நிலை மாறியுள்ளதோ, இல்லையோ, ஆனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மாறியுள்ளது." இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவன உதவி இயக்குனர் சீனிவாசலு, மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை, கனரா வங்கி திருச்சி கோட்ட மேலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு தொழில்முனைவோர் சங்க தலைவர் ராணி முரளிதரன், துணைத்தலைவர் மல்லிகா, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சியாமளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

0 comments: