தமிழ் இதழியலுக்கு அடித்தளமிட்டவர் பாரதி: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

தேவகோட்டை, செப்.27: தமிழ் இதழியலுக்கு அடித்தளமிட்டவர் மகாகவி பாரதியார் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதி விழாவின் பொன் விழாக் கருத்தரங்கில் "இதழியலாளர் பாரதி வழியில் ஏற்றம் காண்போம்' எனும் தலைப்பில் அவர் ஆற்றிய சிறப்புரை:
""பாரதி என்ற கவிஞனை உலகம் அறிந்திருக்கிறது. ஆனால், அந்தக் கவிஞனுக்கு அடித்தளமிட்டுக் கொடுத்திருப்பது சி. சுப்பிரமணிய பாரதி என்கின்ற இதழாளர்தான் என்பது பலரும் தெரிந்துகொள்ளாத ஒன்று.
ஆங்கிலேய அரசு புதுவையில்கூட பாரதியைத் தனது "இந்தியா' பத்திரிகையை நடத்த அனுமதிக்கவில்லை. சந்தாப் பணத்தை பறித்துக் கொண்டது. தபாலில் இதழ்கள் அனுப்பினால் பறிமுதல் செய்தது. "இந்தியா', "விஜயா', "சூரியோதயம்', "பாலபாரதி' என்று பல பத்திரிகைகளை நடத்தி ஓய்ந்தார். பத்திரிகைகளை நடத்த முடியாமல் போனபோதுதான் பாரதி முழுமூச்சாகக் கவிதை புனைவதில் ஈடுபடுகிறார். ஒருவேளை பாரதியை ஆங்கிலேய அரசு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்திருந்தால் அவர் கவிஞராக பரிணமித்திருக்க முடியாதோ என்னவோ?
1902 ஆம் ஆண்டு வடநாட்டிலிருந்து திரும்பி எட்டையபுரம் ஜமீனில் ஆஸ்தான கவிஞராக இருந்தார் பாரதி. ஒரு ஜமீன்தாரிடம் ஆஸ்தான கவியாக இருப்பது என்பது சுதந்திர தாகம் கொண்ட அந்தக் கவிக்குயிலுக்கு மூச்சு முட்டியது. எட்டையபுரத்திலிருந்து வெளியேறிய பாரதி, 1904-ம் ஆண்டில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதுவும் தாற்காலிகப் பணிதான். பின்பு, தனது சக ஆசிரியர் உதவியால் சென்னையில் "சுதேசமித்திரன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்.
அப்போதெல்லாம் பத்திரிகை ஆசிரியரைப் பத்ராதிபர் என்றுதான் அழைப்பார்கள். "சுதேசமித்திரன்' பத்ராதிபர் என்று ஜி. சுப்பிரமணிய அய்யரின் பெயர்தான் வந்ததே தவிர சுப்பிரமணிய பாரதியின் பெயர் போடப்படவில்லை.
வெளியில் பெயர் தெரியாவிட்டால் என்ன? அந்த எழுத்து வாசகர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. வாசகர்கள் யார் இந்த எழுத்தாளர் என்று கேட்டு, பாரதி அடையாளம் காணப்பட்டுவிட்டார்.
இன்றைய பத்திரிகைகளுக்கு செய்தி கிடைக்க எத்தனையோ தகவல் தொழில்நுட்ப வசதிகள், மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால், அன்றைக்கு பாரதி இதழாளராக வாழ்ந்த காலத்தைச் சிந்தித்துப் பார்த்தோமேயானால், இப்படி எந்த வசதிகளும் இல்லாத காலம். லண்டனில் இருந்து ஆங்கிலப் பத்திரிகைகள் காலதாமதமாகக் கப்பலில் வந்து சேரும். அதிலிருந்து உலகச் செய்திகளை எடுத்து வெளியிடுவார்கள்.
தந்தி வசதி வந்துவிட்ட காலமாக இருந்ததால், தந்தி மூலம் வரும் செய்திகளைத் தமிழ்ப்படுத்தி, மாலையில் சென்னை பத்திரிகைகளில் செய்தி வரும். அந்தப் பத்திரிகை செய்திகள் மறுநாள் காலையில் பிற ஊர்களுக்குச் சென்று சேரும். அந்த நிலையில், சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பாரதி தன்னை இணைத்துக் கொண்டு, பெயர் தெரியாத முகத்துடன் எழுத்துப் பணியைத் தொடங்கினார்.
பாரதியின் முழுப் பரிமாணமும் சுதேசமித்திரனில் வெளிப்படவில்லை. அவருக்கும் நண்பர்களுக்கும் இது பெரிய ஆதங்கமாகவே இருந்தது. சுதேசமித்திரனில் இருந்து வெளியேறியபோது ந.திருமலாச்சாரியார், பாரதியாரையே ஆசிரியராக கொண்டு ஒரு பத்திரிகை தொடங்கினார்.
"இந்தியா' பத்திரிகையிலும், ஆசிரியர் சுப்பிரமணிய பாரதிதான் என்றாலும் வெளியீட்டாளராகவும், அச்சிடுபவராகவும், இதழாசிரியராகவும் முரப்பாக்கம் சீனிவாசன் என்பவர் பெயர்தான் அச்சாகியது. பாரதியாரின் எழுத்து மிகக் கடுமையாக ஆங்கிலேயே அரசைத் தாக்கியதால் "இந்தியா' இதழாசிரியரை சிறைபிடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, இவர்கள் எதிர்பார்த்ததுபோலவே, சீனிவாசன் கைது செய்யப்பட்டார். பாரதி புதுவைக்குத் தப்பிச் செல்ல முடிந்தது.
விசாரணையின்போது, சீனிவாசன் பாரதிதான் உண்மையான ஆசிரியர் என்றும் தான் ஒரு குமாஸ்தாதான் என்றும், தனக்கு வியாசம் எழுதத் தெரியாது என்றும் சொல்லி தப்பித்துக் கொண்டதாகக் கூறுவார்கள்.
இந்தியா என்ற பெயரில் வந்த அப் பத்திரிகை விளம்பரத்தில், ஆண்டுச் சந்தா ஒரு ரூபாய் எட்டணா என்ற அறிவிப்புடன், அதன் மீது ஒரு குறிப்பும் காணப்பட்டது. அது என்னவென்றால் "ஜமீன்தாரர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும், 200 ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கும் தனியான சந்தா' என்று துணிச்சலுடன் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் முதன்முறையாக ஒரு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது என்று சொன்னால், அது தமிழகத்தில் தூத்துக்குடியில் "கோரல் மில்' என்ற நூற்பாலையிலே வ.உ.சிதம்பரம் பிள்ளையால் ஏற்படுத்தப்பட்டதுதான்.
கோரல் மில் என்பதை பவளத் தொழிற்சாலை என்று தனது தலையங்கத்தில் பதிவு செய்கிறார் பாரதி. அந்தப் பவளத் தொழிற்சாலையிலே நடக்கின்ற வேலைநிறுத்தத்தைப் பற்றிய தலையங்கம், 1907-ல் இந்தியா பத்திரிகையில் பதிவாகி இருக்கிறது. அக்காலத்தில் அந்நியர்களால் நடத்தப்பட்ட ஓர் ஆலையை எதிர்த்து, வெறும் 600 பிரதிகள் மட்டுமே விற்ற இந்தியா பத்திரிகையில், அவர் துணிச்சலாக பதிவு செய்திருப்பது பிரமிக்கத்தக்கதாக உள்ளது.
அன்றைய நிலையில் அப்பத்திரிகை வெறும் 600 பிரதிகள் விற்றாலும், இன்றைக்கு 6 லட்சம் பிரதிகளுக்குச் சமம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இதழியல் உலகுக்கு அடித்தளமிட்டவர்களில் பாரதிக்கு நிச்சயமாக பங்கு உண்டு. இன்றைக்கு எத்தனையோ பத்திரிகைகள் வெளிவருகின்றன. ஆனால், தினசரிப் பத்திரிகை எப்படி அமைய வேண்டும் என்று பாதை அமைத்துத் தந்தவர்கள், எனக்குத் தெரிந்து மகாகவி பாரதியார், தமிழ்த்தென்றல் திரு.வி.க., தினமணியின் ஸ்தாபக ஆசிரியரான "பேனா மன்னன்' என்று அழைக்கப்பெற்ற டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகிய மூவர்தான். இவர்கள் மூவரும் நாட்டுப்பற்று மிக்கவர்கள், சமுதாயச் சீர்திருத்தவாதிகள், நாளைய தலைமுறை பற்றி கவலைப்பட்டவர்கள், தான் கொண்ட கருத்துகளை எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதை துணிந்து தங்களது தலையங்கங்களில் பதிவு செய்தவர்கள்.
இதில், வியக்கத்தக்க விஷயம் ஒன்று உண்டு. இந்தியா பத்திரிகையின் அடிப்படைக் கொள்கையை பாரதி அந்தப் பத்திரிகையின் அட்டையிலேயே வெளிப்படுத்தி இருப்பார். சுதந்திரமும், சமத்துவமும், சகோதரத்துவமும்தான் பத்திரிகையின் அடிப்படை நோக்கம் என்று "இந்தியா' பத்திரிகை அறைகூவல் விடுத்தது.
இதழாளர் பாரதியைப் பற்றிய ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. நல்ல தூய தமிழில் கவிதை புனைந்த பாரதியின் உரைநடையில் மட்டும் வடமொழிக் கலப்பு இருந்ததே ஏன் என்பதுதான் அது.
ஒரு பத்திரிகையாளன் என்பவன் அன்றைய காலக்கட்டத்தில் வாழுகின்ற மக்கள், எந்த மொழியில் பேசுகின்றார்களோ, அந்த மொழியில் பேசி, எழுதி தனது அடிப்படையான நோக்கத்தை, கருத்தை மக்கள் மன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் அது மக்களிடம் போய்ச் சேரும். பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களில் குறிப்பாக அவரது "இந்தியா', "சுதேசமித்திரன்' பத்திரிகைகளைப் படிக்கும் வாசகர்களைக் கருத்தில்கொண்டே அவர் அப்படி எழுத நேரிட்டது என்று நினைக்கிறேன். அவர் உரைநடையை அன்றைய காலத்திற்கு ஏற்ப, தனது வாசகர்களைக் கருத்தில் கொண்டு எழுதினார். ஆனால், கவிதையை அடுத்த தலைமுறைக்காக எழுதினார்.
பாரதி விட்ட இடத்தை, நவசக்தி இதழின் ஆசிரியர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றார்.
அதற்கு அடுத்தகட்டமாக இதழியலை மேலும் மெருகேற்றும் பொறுப்பேற்கிறார் டி.எஸ்.சொக்கலிங்கம். "தினமணி' நாளிதழ் பாரதியின் பதிமூன்றாவது நினைவு நாளன்று, அவரது கொள்கைகளை நிலைநிறுத்த, அவரது வழியிலே நடைபோட டி.எஸ். சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு சதானந்த் என்பவரால் நிறுவப்படுகிறது.
பாரதி, திரு.வி.க., டி.எஸ். சொக்கலிங்கம் ஆகிய மூவரும் வகுத்த பாதையிலே தமிழ், தமிழ் இதழியல் நடைபெறுமேயானால் இங்கே தமிழ் வாழும், தேசியமும் வாழும்'' என்றார் கே.வைத்தியநாதன்

 

0 comments: