கொளுத்தும் வெயிலில் பணியாற்றுபவர்களின் வசதிக்காக கூல் ஜாக்கெட்

திருவனந்தபுரம் : தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்கும் இயந்திரம் அடுத்த மாதம் சோதனை செய்யப்படுகிறது. அதேபோல் கொளுத்தும் வெயிலில் பணியாற்றுபவர்களின் வசதிக்காக கூல் ஜாக்கெட் தயாரிப்பதற்கான போட்டிகள் விரைவில் துவங்க உள்ளன. கேரளாவில் தென்னை மரங்களில் இருந்து தேங்காய் பறிக்க தொழிலாளிகள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. இதனைப் போக்க, மரங்களில் ஏறாமல் கீழே இருந்து கொண்டே தேங்காய்களை பறித்துப்போடும் இயந்திரங்களை தயாரிப்பது குறித்த முதல்கட்டப் போட்டியினை கடந்தாண்டு மாநில தொழில் துறை நடத்தியது. அதில் பல பகுதிகளில் இருந்தும் 462 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் தலைசிறந்த எட்டு பேரை மாநில அரசு தேர்வு செய்தது. அவர்களுக்கு அரசு மானியமாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கி,  இயந்திரங்கள் தயாரிக்கும் பணிக்கு அனுமதி வழங்கியது.

தயாரிக்கப்பட்ட தேங்காய் பறிக்கும் இயந்திரங்களை பரீட்சார்த்த முறையில் சோதித்துப் பார்க்க அரசு முடிவு செய்துள்ளது.இப்பரிசோதனை அடுத்த மாதம் 7ம் தேதி காலை பத்து மணிக்கு நடைபெறுகிறது. இதில் இவ்வகை இயந்திரங்களை தயாரித்துள்ள போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இவர்களைத் தவிர சொந்த முதலீட்டில் இவ்வகை இயந்திரங்களை தயாரித்தவர்களும் போட்டியில் பங்கேற்கலாம். இது தவிர, கடும் வெயிலில் திறந்தவெளியில் பணியாற்றுபவர்களுக்காக கூல் ஜாக்கெட் தயாரிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக இவ்வகை ஜாக்கெட்டுகளை தயாரிப்பவர்களுக்கான போட்டியை நடத்தவும் திட்டமிட்டு வருகிறது.

இவ்வகை ஆடைகளில் உலர்ந்த பனிக்கட்டி, புதுவகை இழைகள் ஆகியவையும், சூரிய சக்தி கொண்டோ, பிரிட்ஜில் வைத்தோ, பேட்டரி மூலம் ரீ-சார்ஜ் செய்யும் வசதியுடனோ இருக்கலாம் என நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இவ்வகை ஆடைகளை தயாரிக்க முன்வருபவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் மானியமும், சிறந்த ஆடையை தேர்வு செய்யும் மூன்று பேருக்கு தலா பத்து லட்ச ரூபாய் வழங்கவும், மாநில தொழில் துறை ஆலோசித்து வருகிறது.

 

0 comments: