பண்ணை அமைத்து கறவை மாடு வளர்த்தால் லாபம்

புதுச்சேரி: மாடு வளர்ப்பு இப்போது கடினமானப் பணியாக மாறிவிட்டது. முன்பு மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்தன. இப்போது விளை நிலங்களும் ரியல் எஸ்டேட்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றன. இதைத் தவிர புறம்போக்கு நிலங்கள் காணாமல் போய்விட்டன. இதனால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் அரிதாகிவிட்டது.
பால் விலை உயர்ந்தாலும் மார்க்கெட்டில் அதற்கு கிராக்கி இருந்து கொண்டுதான் இருக்கிறது. வைக்கோல், பசுந்தீவனம், மாட்டுத் தீவனம், பராமரிப்புக்கான ஆள்கூலி போன்றவற்றை கணக்கிட்டால் லாபம் கிடைக்காது.
இதனால் இப்போதுள்ள சூழ்நிலையில் மாடு வளர்ப்பை சார்புத் தொழிலாக செய்யாமல் முழுநேரத் தொழிலாக விவசாயிகள் மாற்றினால் நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ளது என்கிறார் புதுவை கால்நடை மருத்துவர் குமணன்.
அவர் மேலும் கூறியது: பண்ணை அமைக்கும்போது குறைந்தபட்சம் 20 கறவை மாடுகள் இருக்க வேண்டும். அதிகம் பால் கறக்கும் திறன் கொண்ட ஜெர்ஸி கலப்பின கறவை பசுக்களை வளர்க்க வேண்டும்.
இதுபோன்ற கலப்பின பசு நாளொன்றுக்கு சராசரியாக 10 லிட்டர் வரை பால் கறக்கும். 20 கறவை மாடுகள் கொண்ட பண்ணையில் இருந்து நாளொன்றுக்கு 150 முதல் 200 லிட்டர் வரை பால் கறவை நடைபெறும்.
பண்ணை அமைக்கும் முன்பாக கறவை மாடுகளுக்குப் புல் தயார் செய்ய வேண்டும். 20 கறவை மாடுகள் கொண்ட பண்ணைக்கு ஓர் ஏக்கரில் புல் வளர்க்க வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன்பு புல் வளர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கறவை மாடுகளுக்குப் பசுந்தீவனம் கொடுத்தால்தான் பால் அதிகம் கறக்கும்.
பசுந்தீவனம் 3 வகையில் பயிரிடலாம். அகத்தி, சூபா புல் போன்ற மரவகை பசுந்தீவனம் இருக்கிறது. வேலி மசால் போன்ற பயிறு வகை பசுந்தீவனம் இருக்கிறது. கோ-3 போன்ற புல்வகை பசுந்தீவனம் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும். இதற்காக விதைப்புல், விதைக்கரணை போன்றவை மார்க்கெட்டில் கிடைக்கின்றன.
மானிய விலையில் கிடைக்கும் மாட்டுத் தீவனங்களை வாங்கி கறவை மாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகள் வளர்ப்பை முழுநேரத் தொழிலாக மாற்றி நன்றாகக் கவனித்தால் விவசாயிகள் லாபம் கொழிக்கலாம் என்றார்.

 

0 comments: