வலது கையை வெட்டினால் என்ன...? இடது கையால் எழுதி அசத்தினார்

மூவாற்றுப்புழா : வலது கை மணிக்கட்டை வெட்டினால் என்ன...? மன தைரியம் இருந்தால் போதாதா...? இதோ இடது கையால் ஞான பீட விருதுக்கு தேர்வான கவிஞருக்கு பாராட்டு கவிதை எழுதி பேராசிரியர் அசத்தினார். கேரள மாநிலம் தொடுபுழா நியூமேன் கல்லூரியில் மலையாள மொழித் துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டி.ஜெ.ஜோசப். இவர் தயாரித்த வினாத்தாள் குறிப்பிட்ட மதத்தினரின் கோபத்திற்கு ஆளானது. இந்நிலையில் பேராசிரியர் குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்று விட்டு திரும்பும்போது மர்ம கும்பல் அவரது வலதுகை மணிக்கட்டு பகுதியை வெட்டி எறிந்து தப்பியது.

மருத்துவமனையில் நீண்ட போராட்டத்திற்கு பின் அவரது மணிக்கட்டு பகுதி மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்பட்டது. அவரை கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில் அவர் தற்போது இடது கையால் எழுதும் பயிற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் ஞான பீட விருதுக்கு தேர்வான கவிஞர் ஓ.என்.வி.,க்கு, அவர் இடது கையால் முதல் முதலாக பாராட்டுக் கவிதை எழுதி உள்ளார். அக்கவிதையில் தனது கவிதைகளுக்கு குரு அவர் தான் என்பதையும், திருவனந்தபுரத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கான அகடமியில் கவிதைகள் குறித்து வகுப்பெடுக்க ஓ.என்.வி.,குருப் வந்ததும், அவர் பாடம் எடுத்ததும், இறுதியில், கவிதை மாணவர்கள் சார்பாக தான் நன்றி பாராட்டியதையும் பேராசிரியர் ஜோசப் தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இடது கையால் எழுதும் முதல் கடிதமே தனது கவிதை குருவை பாராட்டி அமைந்ததில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

0 comments: