அயல் பல்கலை.களுக்கு அனுமதி கூடாது: ஜயேந்திரர் வேண்டுகோள்


ஸ்ரீபெரும்புதூர்,  செப்.  29:  அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவுக்குள் அனுமதித்தால் நமது நாட்டின் கலாசாரத்துக்கே பெரிய ஆபத்து ஏற்படும் என்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எச்சரித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் பங்கேற்றனர்.
விழாவில் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது: கல்லூரிப் பருவத்தில் மாணவர்கள் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மன ஒருமைப்பாட்டில் கவனம் செலுத்தி கல்வி கற்க வேண்டும். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களை நம் நாட்டில் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் இங்குள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் காணாமல் போய்விடும். மேலும், அவர்கள் கல்வியை மட்டும் போதிக்காமல் கலாசாரத்தையே மாற்றிவிடுவர். அயல் நாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கல்வி நிறுவனங்களை நடத்தலாம். அவர்களிடம் உள்ள சிறந்த கல்வியை நம் மாணவர்களுக்கு போதிக்கலாம். ஆனால், பல்கலைக்கழகங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது. இதனை நாங்கள் அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.
இந் நிகழ்ச்சியில் தனது பெயரில் அமைந்த வெள்ளி விழா கட்டடத்தை, காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கல்வெட்டில் மலர் தூவி ஆசீர்வதித்தார். கல்லூரித் தாளாளர் ஏ.சி.முத்தையா பேசுகையில், 1984-ல் தொடங்கிய இக் கல்லூரி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு 3500 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர், 270 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர் என்றார்.
இந் நிகழ்ச்சியில் தேவகி முத்தையா, பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

0 comments: