ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்றவர்...

ஓலிம்பிக் நீச்சல் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் ஆஸ்திரேலியாவின் இயான் ஜேம்ஸ் தோர்ப். நீச்சல் உலகில் பல உலக சாதனைகளை தோர்ப் நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக ப்ரீஸ்டைல் பிரிவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார் அவர்.
நியூ செüத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னியில் 1982-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிறந்தார் தோர்ப். அவர் பிறந்தபோது 4.1 கிலோ எடை, 1 அடி 11 அங்குல உயரத்துடன் காணப்பட்டார்.
அவரது தந்தை கென் ஒரு கிரிக்கெட் வீரர். தாய் மார்கரெட் நெட்பால் வீராங்கனை. விளையாட்டுக் குடும்பத்தில் பிறந்த தோர்ப் தனது சகோதரி கிறிஸ்டினாவின் வழிகாட்டுதலின் படி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார்.
இளம் வயதில் தோர்ப்புக்கு குளோரின் அலர்ஜி இருந்தது. இதனால் நீச்சல் அடிக்கும் போது தலையை தண்ணீருக்கு வெளியே வைத்தவாறே நீச்சல் பயின்றார். எனினும், படிப்படியாக இந்தப் பிரச்னையிலிருந்து அவர் மீண்டார்.
1996-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியன் ஏஜ் நீச்சல் போட்டியில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்கள் வென்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றார்.
14 வயதில் ஆஸ்திரேலியாவின் தேசிய நீச்சல் அணியில் இடம் பெற்று சாதனை படைத்தார்.
1998-ம் ஆண்டு பெர்த்தில் நடந்த உலக நீச்சல் போட்டியில் 400மீ ப்ரீஸ்டைல், 800மீ ப்ரீஸ்டைல் தொடர் நீச்சல் பிரிவுகளில் தங்கம் வென்றார்.
1998-லிருந்து 2004-ம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து ஒலிம்பிக், பான் பசிபிக், காமன்வெல்த், உலக நீச்சல் போட்டிகளில் 400மீ ப்ரீஸ்டைல் பிரிவில் தொடர்ந்து தங்கம் வென்றார் தோர்ப்.
உலக நீச்சல் போட்டியில் 6 தங்கப் பதக்கங்கள் வென்ற முதல் வீரர் தோர்ப். உலக நீச்சல் போட்டிகளில் மொத்தம் 11 தங்கப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.
2002-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 6 தங்கம், ஒரு வெள்ளியுடன் 7 பதக்கங்களை வென்றார்.
அதே ஆண்டு நடந்த பான் பசிபிக் நீச்சல் போட்டியிலும் தனிநபர் ப்ரீஸ்டைல், ப்ரீஸ்டைல் தொடர் நீச்சல்களில் 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
 2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400மீ, 200மீ ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கமும், 100மீ பிரிவில் வெண்கலமும் வென்றார். இதன் மூலம் ஒரே போட்டியில் இந்த மூன்று பிரிவிலும் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை தோர்ப் படைத்தார்.
தனிநபர் பிரிவில் 13 உலக சாதனைகளையும், தொடர் நீச்சல் பிரிவில் 5 உலக சாதனைகளையும் தோர்ப் நிகழ்த்தியுள்ளார்.
ஆண்டின் சிறந்த உலக நீச்சல் வீரராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையும் இயான் தோர்ப்பையே சாரும்.
காயம் காரணமாக 2006 நவம்பரில் நீச்சல் போட்டிகளிலிருந்து தோர்ப் ஓய்வு பெற்றார்

 

0 comments: