ஜெர்மனி, பிரெஞ்ச் கற்ற இன்ஜினியர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு

சென்னை : ""பொறியியல் மாணவர்கள் ஜெர்மனி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொண்டால், ஐரோப்பிய நாடுகளில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற முடியும்,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை, தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, 90 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 4,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிய எனது தலைமையிலான அதிகாரிகள் குழு பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, பிரான்சு, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கு என, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி எதுவும் அளிக்கப்படுவதில்லை. நமது மாணவர்கள் பிரெஞ்ச், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளை கூடுதலாக கற்றுக் கொண்டால், ஐரோப்பிய நாடுகளில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற முடியும்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள், அந்நாட்டு மாணவர்களை விட இந்தியா, சீன மாணவர்களையே விரும்புகின்றனர். பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாட்டு மாணவர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. "எராஸ்மஸ் முன்டஸ்' என்ற திட்டத்தின் கீழ், அண்ணா பல்கலையில் பி.இ., மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்த நான்கு மாணவர்களுக்கு, ஐரோப்பிய பல்கலையில் இரண்டு ஆண்டு எம்.இ., படிப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

 

0 comments: