வி.ஐ.டி.,யில் புத்தாக்க பயிற்சி முகாம்

சென்னை: பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, மூன்று நாள் புத்தாக்க பயிற்சி, வி.ஐ.டி., பல்கலைக் கழகத்தில் துவங்கியது. சென்னை, வி.ஐ.டி., பல்கலை சார்பில், கடந்த ஏழு ஆண்டுகளாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 1,100 பேர் கலந்து கொள்ளும் இம்முகாமை, வேலூர் கலெக்டர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், கலெக்டர் ராஜேந்திரன் பேசுகையில், "கல்விச் செல்வம் என்பது அழியாசெல்வம். இதை ஆசிரியர்கள் முறையாக தனி கவனத்துடன் சொல்லித் தர வேண்டும். மாவட்ட தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியுள்ள வேலூர் மாவட்டத்தின் நிலை மாற, ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி, தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும்'என்றார். வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் பேசுகையில், உலகளவில் கல்வித் தரம் உயர்ந்து வரும் நிலையில், நாமும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்காக, கடந்த ஏழு ஆண்டுகளாக, வி.ஐ.டி., சார்பில், புத்தாக்க பயிற்சியையும், ஊக்க பரிசுகளையும் வழங்கி வருகிறோம். பள்ளிகளில் நிலவும் இடப்பிரச்னை, ஆசிரியர் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளை போக்கிட கோரிக்கை வைக்கிறேன்'என்றார்.

 

0 comments: