அன்பை வளர்க்கும் திசையில் ஆன்மிகம்: பொன்னம்பல அடிகளார் பேச்சு

திருச்சி, செப். 28: அன்பை வளர்க்க வேண்டி
ய திசையில் ஆன்மிகம் செல்ல வேண்டும் என்றார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.


 திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முகம்மது சமய நல்லிணக்க அறக்கட்டளைச் சொற்பொழிவில் அவர் மேலும் பேசியது:
 "மதச்சார்பற்ற நம் நாட்டில் சகோதரத்துவத்துடனும், சமய நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது.
 நம்முடைய குறைகள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அடுத்தவர்களுடைய குறைகளை முப்பரிமாணக் கண்ணாடி வைத்துப் பார்க்கிறோம். அடுத்தவர் குறைகளைப் பார்த்து பழக்கப்பட்டு, நமக்கு நாமே சாதகமாகத் தீர்ப்பு எழுதிக் கொள்கிறோம்.
 நீரிலும், நிலத்திலும், நெருப்பிலும், அண்டவெளியிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை எந்த வடிவத்திலும் அடையாளம் காண முடியும் என்பதை எல்லா மார்க்கங்களும் வலியுறுத்துகின்றன.
 சமயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வரை குழப்பங்களும், பிரச்னைகளும் இருக்கும். அடுத்தவர் துன்பங்களைத் தன் துன்பமாக எண்ணும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
 வாழ்க்கை என்பது புத்தகங்களில் தேடுவது அல்ல. அனுபவங்களில் தேடுவது. அந்த அனுபவத்தின் மூலம் நிறைய கற்றுக் கொள்ள முடியும். மனித சமூகத்தில் சமத்துவம் ஏற்பட வேண்டும். இதற்காகத்தான் இஸ்லாமிய மார்க்கத்தில் "ஜக்காத்' அளிக்கும் பழக்கம் உள்ளது.
 உலகைப் புரட்டிப் போட்ட சுனாமி பல உயிர்களைப் பலி வாங்கியது. மனிதர்களின் மரணத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பேதமில்லாமல் வாழும் காலத்தில் பொதுமையாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை சுனாமி சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளது.
 அன்பு உள்ள இடத்தில் பேதத்திற்கு இடம் இருக்காது. அன்பை வளர்க்கும் திசையில் ஆன்மிகம் செல்ல வேண்டும் என்பது உண்மையான ஆன்மிகவாதிகளின் எண்ணம்.
 1947-ம் ஆண்டு நம் நாடு விடுதலைப் பெற்றபோது அதற்கு விலை மதிப்பில்லாத விலை தரப்பட்டது. மனிதர்கள் பரிமாறப்பட்டார்கள். நம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்துக்கள் நம் நாட்டுக்கும் இட மாற்றம் செய்யப்பட்டார்கள்.
 அப்போது ஏற்பட்ட புரளியில், இந்துக்களும், முஸ்லிம்களும் சொந்த சகோதரிகளையே கொன்றார்கள்.
 கோவையில் பதற்றம் நிறைந்த காலத்தில் நான் அங்கு சென்று அமைதியை நிலைநாட்ட முயன்றபோது, "இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்களே, பாதுகாப்பு இல்லையே' என்றனர் அங்குள்ள முஸ்லிம்கள், "நீங்கள்தான் எனக்குப் பாதுகாப்பு என்றேன்'.
 மண்டைக்காடு கலவரத்தின் போது நமது மகா சன்னிதானம் அங்கு சென்று மத ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட்டார்.
 நம் நாட்டில் இந்து, முஸ்லிம்,கிறிஸ்துவம் ஆகியவை இணைந்து இருப்பதே பரிபூரண இந்தியா என்றார் விவேகானந்தர். சமயங்கள் வேறாக இருந்தாலும் மனிதர்கள் ஒற்றுமையை வளர்க்க முயல வேண்டும்' என்றார் பொன்னம்பல அடிகளார்.
 கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியது:
 "இந்தியாவிற்கு என்ன தேவை என்பதைப் பார்க்க வேண்டும். 2020-ல் இந்தியா வல்லரசாக உருவெடுக்கும் என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். பீரங்கிகளாலும், ராணுவத்தாலும் அல்ல. மதங்களைக் கடந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஒன்றாக இருந்து வலிமைகாட்டும் போது அதைவிட வேறு சக்தியை வல்லரசு என்று சொல்ல முடியாது' என்றார்.
 நிகழ்ச்சிக்கு கல்லூரித் துணை முதல்வர் ஏ.ஆர். முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். கல்லூரியின் முன்னாள் முதல்வர் பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முகம்மது முன்னிலை வகித்தார்.
 கல்லூரிச் செயலர் அப்துல் கபூர், பொருளாளர் கலீல் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவர் எம்.ஏ.எஸ். ஹபீபுர் ரஹ்மான் வரவேற்றார். பேராசிரியர் எஸ். நாகூர்கனி நன்றி கூறினார்

 

0 comments: