விபத்தில் பலியான கல்லூரி மாணவியின் கண்தான ஆசை: பெற்றோர் நிறைவேற்றினர்

திருப்பரங்குன்றம் : குன்றத்தில் விபத்தில் பலியான கல்லூரி மாணவி, சிறுவயதுமுதல் தான் இறந்த பின் கண்தானம் செய்ய வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதை பெற்றோர் நிறைவேற்றினர்.

திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியை சேர்ந்த வெங்கடாச்சலம்-லதா தம்பதியரின் மகள் ரேவதி(22). சவுராஷ்டிரா பெண்கள் கல்லூரியில் பி.எஸ்சி., ஐ.டி., இரண்டாம் ஆண்டு படித்தார். அண்ணன் மதனுடன் டூவீலரில் அக்., 27 காலை கல்லூரிக்கு சென்றார். டிராக்டர் மோதியதில் டூவீலரை ஓட்டிச் சென்ற மதன் லேசான காயத்துடன் தப்பினார். ரேவதி பலத்த காயம் அடைந்து, சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பலியான ரேவதி, சிறுவயது முதல் தான் இறந்தால் கண்தானம் செய்ய வேண்டும், என பெற்றோரிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.

அவரது பெற்றோர், உறவினர்கள் கூறியதாவது:"எனக்கு ஏதாவது நடந்து விட்டால், எனது கண்களை தானமாக கொடுத்து, ஒருவரை வாழச் செய்வதுடன், அவர் மூலம் உலகை காணச் செய்யுங்கள்' என அடிக்கடி ரேவதி கூறிவந்தார். கல்லூரியில் என்.எஸ். எஸ்., சில் சேர்ந்தபின்னர், கண்களை தானமாக கொடுக்க, கல்லூரியில் எழுதி கொடுத்தார். நாங்களும் சம்மதித்தோம். மதுரை அரசு ஆஸ்பத்திரில் அவரது கண்களை தானமாக வழங்கிவிட்டோம். அவரது கண்கள் பிறருக்கு பொருத்தப்பட்டபின்னர், அவர் மூலம் எங்களது பெண்ணின் கண்கள் உயிர் வாழ்வது எங்களுக்கு பெருமையாகும். இதன் மூலம் ரேவதியின் ஆசை பூர்த்தி அடையும், என கண்ணீருடன் தெரிவித்தனர்.

மரண வாசலிலும் மறக்காத மனது: விபத்து நடந்த இடத்தில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ரேவதி, அன்ணன் மதனிடம், ""எனக்கு ஏதாவது நடந்து விட்டால், எனது கண்களை தானமாக வழங்க மறந்து விடாதீர்கள்,'' என மரண வேதனையிலும் கண்தானத்தை வலியுறுத்தி கூறி உள்ளார்.

 

1 comments:

Anonymous said...

we salute your manners!!!!!!!!!!!!!!!!!!!!1