‘அர்ப்பணிப்பு பண்புள்ள ஆசிரியர்கள் தேவை’

பொள்ளாச்சி: “நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க, அர்ப்பணிப்பு பண்புள்ள ஆசிரியர்கள் தேவை,” என, சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.
பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில், இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் விஜயமோகன் தலைமை வகித்தார்.
மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, சென்னை பல்லை துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது: நாட்டில், உயர்கல்வியை மேம்படுத்த பல தரப்பிலும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், அனைத்து மாணவர்களுக்கு உயர்கல்வி சென்று சேர்வது கிடையாது. உயர்கல்வி கிடைக்கும் மாணவர்களுக்கும், வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதி முழுமையாக இல்லை.
இந்தியாவில், இளைஞர்களுக்காக ஒன்பது மில்லியன் வேலைவாய்ப்பு உள்ளது. இதில், 70 சதவீதம் சேவை மேலாண்மை சார்ந்த வேலைவாய்ப்பு. இதுபோன்ற வேலை வாய்ப்பு பெற, தனித்திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். அறிவு சார்ந்த திறமை அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், படிக்கும் இளைஞர்களில் ஒன்பது சதவீதம் பேருக்கு மட்டுமே அனைத்து திறமைகளும் நிறைந்துள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு போதிய திறமை இல்லாத நிலை உள்ளது. இந்நிலைய மாற, உயர்கல்வியில் தகுந்த மாற்றம் தேவை. ஆசிரியர்கள் மாணவர்களிடம், தனித்திறமைகளை வளர்க்கும் வகையிலான கல்வியை கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் மூலம்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். நகர்ப்புறத்தை விட கிராமப்புறங்களிலுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க வேண்டும்.
எதிர்கால திட்டத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். கல்வி என்பது தொடர்ச்சியான செயல்பாடு. அதை உணர்ந்து, வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப கல்வி கற்க வேண்டும். பட்ட படிப்பு முடித்த மாணவர்களிடம், சமூகம் மிக அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறது.
சமுதாயத்திற்கு தேவையான தலைமை பண்புகளை இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும். நம் நாட்டிற்கு தேவை அர்ப்பணிப்பு பண்புகளை கொண்ட ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களுக்கு அதிக பட்டம் தேவையில்லை. அதிக அனுபவம், விரிந்த அறிவு, உயர்ந்த தொலைநோக்கு பார்வை, அர்த்தமுள்ள அறிவு ஆகியவை ஆசிரியர்களுக்கு தேவை. ஆசிரியர்கள், சமூக கல்வி பண்பாட்டை உருவாக்குபவர்களாகவும், உயர்த்துபவர்களாகவும் உள்ளனர். எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் மாணவர்களிடம் வேண்டும்.
எதிர்காலத்தை கண்டு பயப்படாமல், அதை சிறப்பாக மாற்ற திட்டமிட வேண்டும். இவ்வாறு, துணைவேந்தர் திருவாசகம் பேசினார். கல்லூரி முதல்வர் குழந்தைசாமி, துணைத்தலைவர் சேதுபதி, செயலாளர் வெங்கடேஷ், முதன்மை இயக்குனர் சேட்டு உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில்,403 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

 

1 comments:

Sai Gokula Krishna said...

நம் நாட்டிற்கு தேவை அர்ப்பணிப்பு பண்புகளை கொண்ட ஆசிரியர்கள் தான்.
Nowadays all are moneymotive. No dedication, they work as just for duty.