அண்ணா பல்கலை.யில் "என் பெயர் மரம்' திட்டம் தொடக்கம்

திருச்சி: திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் என் பெயர் மரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் பி. தேவதாஸ் மனோகரன்.    இந்தப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா, பொறியாளர்கள் நாள் விழா, முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா, மற்றும் மரக் கன்றுகள் நடும் விழாவில் அவர் மேலும் பேசியது:   "21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பிரச்னையாக புவி வெப்பமயமாகுதல் உள்ளது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், காடுகள் அழித்தலே பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.  இந்த புவி வெப்பமயமாதலைக் குறைக்க இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் முதலாமாண்டு மாணவர்கள் மூலம் 1,100 அரிய வகை மரக் கன்றுகளை நடவுள்ளோம். இந்தத் திட்டத்துக்கு "என் பெயர் மரம் திட்டம்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  எந்த வகை மரமாக இருந்தாலும், அதற்கு மாணவர்களின் பெயரே சூட்டப்படும். தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு அந்தந்த மாணவர்களே தங்களது மரங்களைப் பாதுகாக்க வேண்டும். இந்தத் திட்டம் அனைத்து உறுப்புக் கல்லூரிகளிலும், பிற இடங்களிலும் விரைவில் தொடங்கப்படும்.    தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களுடைய பாடத் திட்டத்தில் ஆங்கிலமும் தொடர்பு மொழியாக நான்கு ஆண்டுகளுக்குப் பயிற்றுவிக்கப்படும். இறுதியில் அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் மூலம் அவர்களும் ஆங்கிலப் பாட வழி மாணவர்களுக்கும் இணையாகச் செயல்பட முடியும்.  தொடர்பு மொழிக்காக ஜெர்மன், பிரெஞ்ச், ஜப்பான் ஆகிய மொழிகளும் நிகழாண்டு முதல் விருப்பமுள்ள மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும்' என்றார் தேவதாஸ் மனோகரன்.  முன்னதாக, பதிவாளர் (பொறுப்பு) ஜா. ராஜா வரவேற்றார். புல முதல்வர் இரா. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

 

1 comments:

Anonymous said...

பல்கலைக்கழக வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி தொடங்கப்படுவது பெருமைப்படத்தக்கது. மரம்,மாடுகள் தான் கற்பகத்தருவும்,காமதேனுவும்.வளாகங்கள்,சாலைகளின் இருபுறம், வயல்களின் வரப்புகள் ,மேய்ச்சல் நிலங்கள் ஆகிய இடங்களில் மரம் நட்டுவிட்டால் நாட்டில் ஒரு பெரிய மாற்றமே வரும்.இயற்கையும் தன் சீற்றத்தினை குறைக்கும்.

தங்கல் அனைவரின் முயற்சியும் வெல்ல "தாளாண்மை உழவர் இயக்கம்" மனதார வேண்டுகிறது.