84 சதவீத கிராம மக்களுக்கு "இன்டர்நெட்' தெரியாது -ஆய்வுத் தகவல்

புதுடில்லி :"இணையதளம் என ஒன்று இருப்பதே, 84 சதவீத கிராம மக்களுக்குத் தெரியாது' என, சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் கிராமங்களை உடனுக்குடன் சென்றடைய வேண்டும் என்பதற்காக, பொது சேவை மையங்கள், மாநிலம் பரவிய வலை இணைப்பு (ஸ்வான்) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் சிறந்த உட்கட்டமைப்புத் தேவை. அதற்கு இணையதளம் தேவை. ஆனால் இணையதளம் என்ற ஒன்று இருப்பதே பெரும்பான்மையான கிராமத்தவர்களுக்குத் தெரியவில்லை என்பது தான் உண்மை நிலவரம்.சமீபத்தில், இந்திய இணையதளம் மற்றும் மொபைல்போன் அசோசியேஷன் (ஐ.ஏ.எம்.ஏ.ஐ.,) மற்றும் இந்திய சந்தை ஆராய்ச்சி பீரோ (ஐ.எம்.ஆர்.பி.,) ஆகிய அமைப்புகள் இணைந்து, ஆந்திரா, அசாம், மகாராஷ்டிரா, ஒரிசா, ராஜஸ்தான், தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் ஓர் ஆய்வு நடத்தின.கிராமப்புறங்களில் இணையதளம் பற்றிய விழிப்புணர்வு எந்த நிலையில் இருக்கிறது என்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.


அந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:மொத்தம் 84 சதவீத கிராம மக்களுக்கு இணையதளம் என ஒன்று இருப்பதே தெரியவில்லை. மீதியுள்ளவர்கள் இணையதளம் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர். அவர்களில் 85 சதவீதம் பேருக்கு இ-மெயில் முகவரி உள்ளது. 67 சதவீதம் பேர் இணையதளங்களில் வீடியோ பார்க்கின்றனர்; இசை கேட்கின்றனர்.அவர்களில் 48 சதவீதம் பேர் கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். 13 சதவீதம் பேர் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றம் பற்றித் தெரிந்து கொள்கின்றனர். எட்டு சதவீதம் பேர் உரங்களைப் பற்றித் தெரிந்து கொள்கின்றனர்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 comments: