அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் கடைசி தேதி ஆக.,10

கோவை:2010-2011ம் ஆண்டில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம், கோவை அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் நேற்று முதல் வழங்கப்படுகிறது.கோவை மணிக்கூண்டு பகுதியில் உள்ள அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் பி.எட்., படிப்புக்கு 125 இடங்களும், எம்.எட்., படிப்புக்கு 25 இடங்களும் உள்ளன. இதில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் நேற்று முதல் கல்லூரியில் வழங்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 300 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 175 ரூபாயும் கொடுத்து விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள் சான்றொப்பமிட்ட ஜாதிச் சான்றிதழை காண்பித்து சலுகை கட்டணத்தில் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். தினமும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை விண்ணப்ப படிவம் வழங்கப்படும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். கவுன்சிலிங் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பி.எட்., கல்லூரிகளில் சேர விரும்புபவர்கள் மட்டும் இந்த விண்ணப்ப படிவத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அரசியல் அறிவியல், தர்க்கவியல், சமூகவியல், உளவியல், இந்திய கலாச்சாரம் ஆகிய பாடங்களை பட்டப் படிப்பில் படித்த மாணவர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்படுவதில்லை. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "செயலாளர், தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை(2010-2011), வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்(தன்னாட்சி), காமராஜர் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை-5' என்ற முகவரிக்கு ஆக., 10ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இத்தகவலை, கல்லூரி முதல்வர் மேரி லில்லி புஷ்பம் தெரிவித்தார்.

 

0 comments: