சர்வதேச பயோ இன்ஜினியரிங் மாநாடு

செங்கல்பட்டு : சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் பையோ இன்ஜினியரிங் துறை சார்பில், சர்வதேச அளவிலான பயோ இன்ஜினியரிங் மூன்று நாள் மாநாடு நேற்று பல்கலைக் கழகத்தில் துவங்கியது.விழாவிற்கு, பல்கலைக்கழக புரோவோஸ்ட் பொன்னவைக்கோ தலைமை தாங்கினார். பல்கலைக் கழக இணை துணைவேந்தர் கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.பயோ டெக்னாலஜி துறைத் தலைவர் முகமது அலி, மாநாட்டின் நோக்கங்கள் குறித்து விளக்கினார். காசநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர்(பொறுப்பு) குமாரசுவாமி, மாநாட்டை துவக்கி வைத்து மாநாட்டு மலரை வெளியிட்டார்.பயோ இன்ஜினியரிங் துறை நிகழ்காலம் மற்றும் எதிர்கால மாற்றங்கள் குறித்து விவாதிக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஒன்பது சிறந்த அறிவியலாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.இதன்மூலம் இந்திய மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்களிடையே தங்கள் அனுபவங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ள முடியும்.மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த 1,600 மாணவர்கள், ஆராய்ச்சி யாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.காசநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் குமாரசுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:காச நோயாளிகளுக்கு தற்போது ஆறு மாத கால தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை நான்கு மாத சிகிச்சையாக குறைப்பதற்கு ஆராய்ச்சிகள் செய்து வருகிறோம்.இந்த ஆராய்ச்சியை, கடந்த ஒரு ஆண்டாக புதிதாக கண்டறியப்பட்ட 1,000 நோயாளிகள் மூலம் நடத்தி வருகிறோம். ஆராய்ச்சி ஐந்து ஆண்டுகள் நடைபெறும். காசநோய் நான்காயிரம் ஆண்டுகளாக உள்ளது. 1960ம் ஆண்டு காசநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.காசநோய், நீரிழிவு நோய், ரத்தசோகை போன்ற நோய்களுக்கு நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறது. இந்நோய்களுக்கு குறைந்த காலத்தில் சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அதற்கு இன்னும் 10 ஆண்டுகளாகும்.இவ்வாறு குமாரசுவாமி கூறினார்.பல்கலைக்கழக இயக்குனர் முத்தமிழச்செல்வன் வரவேற்றார். பதிவாளர் சேதுராமன் நன்றி கூறினார்.

 

0 comments: