நிலவொளிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நிலவொளிப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் கைத்தறி மற்றும் உப தொழில்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பல குழந்தைகள் விடலை பருவத்தை கடந்து நின்றனர். அவர்கள் கல்வியைத் தொடர ஆர்வமாக இருந்தனர். அவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் நிலவொளிப் பள்ளிகளை துவக்கியது. இந்த திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் காரணமாக நூறு சதவீதம் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கல்வியை தொடர முடியாமல் இடை நின்றவர்களுக்காக நிலவொளிப் பள்ளியை நடப்பாண்டிலும் தொடர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.நிலவொளிப் பள்ளியில் சேர காஞ்சிபுரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பத்தை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அறிவொளி இயக்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நிலவொளிப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள், பயிற்சி குறிப்பேடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நிலவொளிப் பள்ளிகள் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகாந்தன் தெரிவித்தார்.

 

0 comments: