பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி படிப்புக்கு ஏற்பாடுகள்

மதுரை: பொறியியல் கல்லூரியில் தமிழ் வழி படிப்புக்கான ஏற்பாடுகள் நடப்பதாக மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் முருகேசன் பேசினார்.
மதுரையில் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் முருகேசனுக்கு பாராட்டு விழா நடந்தது. சங்க செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் முதல்வர் வேலாயுதம், பொதுசெயலாளர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் முருகேசன் பேசியதாவது:
மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை விரைவில் பெற உள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டடப் பணியை துவங்கிவிடும். இன்னும் சில நாட்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகள் துவக்கப்பட உள்ளன. பொறியியல் பட்ட மேற்படிப்பில் முழுநேர, பகுதி நேர படிப்புகள் துவக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடக்கின்றன. இப்பல்கலையில் 36 கல்லூரிகள் உள்ளன. மேலும் 3 கல்லூரிகள் வரஉள்ளன. 
இதை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இன்னும் பல கல்லூரிகள், பல்கலைகள் மட்டுமின்றி, பல படிப்புகளும் வர உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. பொறியியல் படிப்பில் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ் வழி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த கல்வி ஆண்டில் முதலாண்டு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் தமிழில் வரஉள்ளது. ஜப்பான், சீனா, கொரியா, ஜெர்மனியில் அவரவர் தாய்மொழியில் கற்கின்றனர். எனவே தமிழிலும் படிப்போர் வெற்றி பெறலாம் என்பதால் அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்றார்.


 

0 comments: