இன்ஜி., தமிழ் வழி கல்வியில் 600 மாணவர்: துணைவேந்தர் தகவல்

அரியலூர்: அரியலூர்  இன்ஜினியரிங் கல்லூரிக்கு  திருச்சி அண்ணா பல்கலை துணை வேந்தர் தேவதாஸ் மனோகரன் வருகை புரிந்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்சி அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 56 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளான திருச்சி, திருக்குவளை, அரியலூர், பட்டுக்கோட்டை, பன்ருட்டி ஆகிய ஐந்து இன்ஜினியரிங் கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் உள்ளிட்ட இரண்டு பாடப்பிரிவுகளிலும் தலா 60 இடங்கள் வீதம் மொத்தம் 600 இடங்களுக்கு தனியே மாணவர் சேர்க்கை நடப்படுகிறது.தமிழக முதல்வர் உத்தரவுப்படி அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் அந்தந்த பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்து, கிராம மேம்பாட்டுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ளும். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அரியலூர் அண்ணா பல்கலைகழக இன்ஜினியரிங்  கல்லூரியின் நிர்வாகம் உள்கட்டமைப்பு மற்றும் லேப் வசதி மேம்பாட்டுக்காக தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் முதல் கட்டமாக 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். மேற்கண்ட பணிகள் ஓராண்டில் செய்து முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் அண்ணா பல்கலை  இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதுக்கு கவுன்சிலிங் மூலம் உத்தரவு பெற்று வந்த மாணவ, மாணவிகள் சேர்க்கையை, துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் துவக்கி வைத்தார். காவனூர் கிராமத்தில் அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லூரிக்கு கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.ஆய்வின் போது கல்லூரி முதல்வர் கந்தசாமி, தனி அலுவலர் பால்சிங் மோசஸ், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் பலர் உடனிருந்தனர்

 

0 comments: