பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்குசறுக்குப்பாதை, கழிப்பறை வசதிகள்

மதுரை:பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென சறுக்குப்பாதை, கழிப்பறை அமைப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.மதுரையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்ட கூடுதல் இயக்குனர் கருணாகரன் தலைமை வகித்தார். இணை இயக்குனர்கள் கார்மேகம் (அனைவருக்கும் இடைநிலை கல்வி), பழனிச்சாமி (மேல்நிலை கல்வி), ராமேஸ்வர முருகன் (பணியாளர் தொகுதி), தர்மராஜேந்திரன் (இடைநிலை கல்வி), ராஜராஜேஸ்வரி (தொழிற்கல்வி), உஷாராணி (என்.எஸ்.எஸ்.,) உட்பட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், பள்ளிகளில் வசதிகள், மாதிரி பள்ளிகள் அமைப்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த ஆண்டு பள்ளிச் சீரமைப்பு மாநாட்டை தேனி, விருதுநகர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 6, 7, 8ம் வகுப்புகளில் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் "இன்ஸ்பயர் அவார்டு' வழங்கப்பட உள்ளது. இதுதவிர மாற்றுத் திறனாளிகளுக்காக பள்ளிகளில் சறுக்குப் பாதை அமைக்கப்படும். இதற்காக பள்ளிகளுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும்.

கழிப்பறை வசதிக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். இவற்றை எந்தெந்த பள்ளிகளில் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் பணிக்காலத்தில் இறந்த ஆசிரியர்கள், ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை விரைவுபடுத்துவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். விரைவில் 200க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

0 comments: