ஐ.டி.ஐ. தேர்வு: வினாத்தாளை மாநில மொழிகளில் தர வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 30: ஐ.டி.ஐ. தொழிற்கல்வி பொதுத் தேர்வு வினாத்தாள்களை மாநில மொழியில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் ஐ.டி.ஐ. மற்றும் தொழிற்பள்ளிகள் கூட்டமைப்புத் தலைவர் கே. சிவக்குமார் வலியுறுத்தினார்.

  இது குறித்து அவர் வியாழக்கிழமை கூறியது:

  தமிழ் வழியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வரும் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கில மொழியில் அமைந்த வினாத்தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வினாத்தாள்களை மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொண்டு விடையளிக்கும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் வழங்க வேண்டும்.

  ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் ஐ.டி.ஐ. இரண்டாமாண்டு கருத்தியல் தேர்வு வினாத்தாள்கள் வெளியானதால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள 662 தனியார் ஐடிஐ, 60 அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தேர்வுக்கு இரண்டு வினாத்தாள்கள் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் வினாத்தாள் வெளியாகிவிட்டால், மாற்று வினாத்தாள்களை பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்றார் அவர்.

 

0 comments: