தமிழகத்தில் விரைவில் 12 புதிய தொழிற்பேட்டைகள்


சென்னை, ஆக.26: தமிழகத்தில் 12 புதிய தொழிற்பேட்டைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் என்.எஸ். பழனியப்பன் தெரிவித்தார்.
சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்பான கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது:
தமிழகத்தில் இப்போது 92 தொழிற்பேட்டைகள் உள்ளன. 16 தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பகுதிகளில் புதிதாக 12 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளன.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தொழிற்பேட்டைகள் அதிகமாக உள்ளன. சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டைதான் நாட்டிலேயே முதலாவது தொழிற்பேட்டையாகும். இந்தியாவிலேயே பெரிய தொழிற்பேட்டை சென்னை அம்பத்தூரில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுதொழில் நிறுவனங்களில் மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இதில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் பெண்கள்.
சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளே அதிகம் வருகின்றன. அந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நிலங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
கிண்டியில் ஒரு கிரவுண்ட் நிலம் ரூ.1 கோடிக்கு விலை போகிறது. அவ்வளவு விலைகொடுத்து சிறுதொழில் நிறுவனத்தைத் தொடங்க முடியாது என்பதால், அரசு அவர்களுக்கான நிலத்தை சலுகை விலையில் வழங்குகிறது.
அதேபோல், அந்த நிறுவனங்களுக்குத் தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும்போதும் சலுகை காட்டப்படுகிறது.
அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறுதொழில் துறையை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற கொள்கையை அரசு அறிவித்துள்ளது.
ஊரகப் பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சியின் பயன் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. சிப்காட் தொழிற்பேட்டைகளில் சிறுதொழில் நிறுவனங்களுக்கு 20 சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. எனவே, இந்த 20 சதவீத இடத்தை சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்திடம் வழங்குமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்பேட்டைகளில் உள்ள சாலைகள், கழிவுநீரை வெளியேற்றும் வசதி, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி வரை வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே, இதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைக்கலாம்.
சிறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முறையை வங்கிகள் எளிமைப்படுத்த வேண்டும் என்றார் என்.எஸ்.பழனியப்பன்.
இதில் "பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்' என்ற தலைப்பில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சிக்பிரிட் ஹெர்சாக் உரையாற்றினார். தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் தலைவர் டி.காந்திகுமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

0 comments: