ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இணையதளம்

சென்னை:ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை ஆன்-லைனில் வழங்குவதற்கான இணையதளம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பல்வேறு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு 235 ரூபாய் முதல் 740 ரூபாய் வரையிலும், பெற்றோருடன் தங்கிப் படிப்போருக்கு 140 ரூபாய் முதல் 330 ரூபாய் வரையிலும் மாதந்தோறும் பராமரிப்புத் தொகையாக வழங்கப்படுகிறது.இதுதவிர, கல்வி நிறுவனங்களுக்கு கட்டணமாக கொடுக்க வேண்டிய தொகையும் வழங்கப்படுகிறது. இதேபோல பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை ஆன் - லைன் மூலம் பரிசீலிக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 82 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று, ஆதிதிராவிடர் நலத்துறையிலும் ஆன் - லைன் முறையை கொண்டு வர, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் எல்காட் முயற்சிகள் மேற்கொண்டன. தேசிய தகவல் மையம், விப்ரோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டது. இந்த மென்பொருள் சேவையை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.

புதிய இணையதளத்தை துவக்கி வைத்து அமைச்சர் தமிழரசி பேசியதாவது:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்களையும் மின்னணு மாவட்டத் திட்டம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத்துறைக்கான மின் ஆளுமை பயன்பாட்டு மென்பொருள் தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் உள்ள தமிழக மாநில பெரும்பரப்பு வலையமைப்பு மற்றும் மாநில தரவு மைய வசதிகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மென்பொருள் மூலம், 2,500 கல்வி மையங்களில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐந்து லட்சம் மாணவர்களுக்கு ஆன் - லைன் மூலம் கல்வி உதவித் தொகை பரிசீலிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மாணவர்களுக்கு 200 கோடி ரூபாய் உதவித் தொகை, எளிய முறையில் உரிய நேரத்தில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.முன்பு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை பெற்று, அவற்றை பரிசீலித்து நிதியுதவி வழங்க காலதாமதம் ஆகி வந்தது. தற்போது யார் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது, இன்னும் யாருக்கு தொகை கிடைக்கவில்லை போன்ற விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் தெரியும். விண்ணப்பங்கள் பரிசீலனை அனைத்தும் ஆன் - லைன் மூலம் நடக்கும்.உதவித் தொகை தயாரானதும், மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் வசதியும் இதில் உள்ளது.

இதற்கான பயிற்சிகள், மாவட்ட அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களுக்கான உதவித் தொகை அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக, மாணவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு, அந்த கணக்கில் உதவித் தொகையை செலுத்தும் முறை கொண்டு வரப்படும்.இவ்வாறு தமிழரசி தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் டேவிதார் வரவேற்றார். ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் சிவசங்கரன் நன்றி கூறினார்.

 

0 comments: