அன்னை தெரசாவின் வாழ்க்கை : புது தகவல் தருகிறார் நவீன் சாவ்லா

புதுடில்லி : அன்னை தெரசாவுடன் 23 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்த தேர்தல் கமிஷன் முன்னாள் தலைவர் நவீன் சாவ்லா, அவரைப் பற்றி எழுதியுள்ள புத்தகத்தில், அன்னை தெரசாவின் ஆன்மிக வாழ்க்கையில் ஒருவித இருள் இருந்ததை, அவரே வெளியிட்ட தகவலாக எழுதியுள்ளார்.

முன்னாள் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, அன்னை தெரசாவுடன் 23 ஆண்டுகள் நெருங்கிப் பழகியவர். அவர், அன்னை தெரசாவை பற்றி "மதர் தெரசா' என்ற அதிகாரப்பூர்வ நூலை எழுதியுள்ளார். இந்நூலை முதலில் 1992ல் சாவ்லா வெளியிட்ட போது, 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளில் விற்பனையானது. தற்போது, அன்னை தெரசாவின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் தருணத்தில் அப்புத்தகத்தில் சில கருத்துக்களை ஆதாரபூர்வமாக சேர்த்திருக்கிறார். அன்னை தெரசாவை புனிதராக அறிவிக்கக் கோரி, ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கு பரிந்துரை செய்த பிரெய்ன் கலோடியஜூக் என்பவர் உள்ளிட்ட மதகுருக்களுக்கு தெரசா எழுதிய பாவமன்னிப்பு கடிதங்களை, பிரெய்ன், தான் எழுதிய "கம் பை மை லைட்' என்ற புத்தகத்தில் சேர்த்து மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். தற்போது அந்தக் கடிதங்களையும் தான் எழுதிய புத்தகத்தில் சாவ்லா சேர்த்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நவீன் சாவ்லா கூறியதாவது: நான் அன்னை தெரசாவை பற்றி எவ்வளவோ படித்தேன். அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அவை என்னில் எந்த மாற்றத்தையும் தரவில்லை. மாறாக, டில்லியில் ஒரு நிகழ்ச்சியில் அவரை நேரில் பார்த்தபோதுதான் அவரது மேன்மையை உணர்ந்தேன். அப்போது அவர் சிறிய உருவம் கொண்டவராக இருந்தார். சற்றே அவரது உடல் வளைந்திருந்தது. அவரது கை, கால்களில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. வெண்மையான அவரது புடவையில் அங்கங்கே ஒட்டுத் தையல்கள் போடப்பட்டிருந்தன. தற்காலம் வரையிலான அவரது வாழ்க்கை வரலாற்றை தொகுத்து அவரது நூற்றாண்டுக்காக அவரது சுயசரிதையை வெளியிட உள்ளேன். அதில் பிரெய்ன் உட்பட பல மதகுருக்களுக்கு பாவமன்னிப்பு கேட்டு அன்னை தெரசா எழுதிய கடிதங்களையும் இணைத்துள்ளேன். அக்கடிதங்களில் அவர் தன் மனவேதனையையும், தன் ஆன்மிக வாழ்க்கையில் இருந்த ஒருவித இருள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இந்நூல், தெரசாவின் பிறந்தநாளன்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

 

0 comments: