"பல்லுயிர் பெருக்கத்திற்கு சேதம் ஏற்பட்டால் மனிதஇனத்திற்கு ஆபத்து'

மதுரை : ""பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் இழப்பால் மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும்,'' என விவசாய பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி பேசினார்.

மதுரை காமராஜ் பல்கலையின் சுற்றுச் சூழல், ஆற்றல், இயற்கை வளத்துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது. துறைத் தலைவர் கே.முத்துச்செழியன் வரவேற்றார். துணைவேந்தர் கற்பககுமாரவேல் தலைமை வகித்தார். வேளாண் விற்பனை குழு தலைவர் கணேசன், சிண்டிகேட் உறுப்பினர் மதனகோபால் மற்றும் பலர் பங்கேற்றனர். "பல்லுயிர் பரவல் மூலம் நிலையான வளர்ச்சி' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை தமிழ்நாடு விவசாய பல்கலை துணைவேந்தர் பி.முருகேசபூபதி துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: உலக நிலப்பரப்பில் 2.5 சதவீதம் இந்தியாவில் உள்ளது. இங்கு 7.43 சதவீத விலங்குகள், 11 சதவீத தாவரங்கள் பரவிக் கிடக்கின்றன. 25 பல்லுயிர் பெருக்க இடங்களில் நான்கு இந்தியாவில் உள்ளது. அந்தந்த இடங்களுக்கே உரித்தான தாவரங்கள், விலங்குகளும் அதிகம் உள்ளன. தாவரங்களில் 30 முதல் 40 சதவீதம், விலங்குகளில் 50 சதவீதம் இவ்வகையில் உள்ளன.

பல்லுயிர் பெருக்கத்தால் தற்போது இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதனால் பூமிக்கு ஏற்படும் அபாயம் குறித்து 1980ல் விழிப்புணர்வு ஏற்பட்டது. 2010ம் ஆண்டுக்குள் ஏற்படும் பல்லுயிர் பெருக்க இழப்பை கட்டுப்படுத்த, 2002ல் பலநாட்டு தலைவர்கள் திட்டங்களை வகுத்தனர். இது பல்லுயிர் பெருக்க பாதுகாப்புக்கு தூண்டுதலாக அமைந்தது. பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் சேதம், மனிதகுல அழிவுக்கு விரைவாக வழிவகுக்கும். இதை தவிர்க்க மனிதர்களால்தான் முடியும் என்றார்.

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆர்.சுந்தரராஜூ பேசியதாவது: ஐரோப்பா, அமெரிக்காவில் இல்லாத உயிரிகள் இந்தியாவில் உள்ளன. மக்கள் தொகை பெருக்கமே பல்லுயிர் பரவலுக்கு பிரச்னையாக உள்ளது. அதிகமான இயற்கை வளங்கள் மக்களால் சுரண்டப்படுவதே இதற்கு காரணம். பல்லுயிர் பெருக்கத்தை காப்பாற்றுவதில் வனத்துறை முக்கிய பங்காற்றுகிறது. முன்பு காட்டு வளத்தை பாதுகாப்பது மட்டுமே வனத்துறையின் பணியாக இருந்தது. தற்போது வனவளத்தை சார்ந்து உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதன் மூலமும் காடுகளை பாதுகாக்கிறோம். ஒருநாட்டில் 33 சதவீதம் காடாக இருக்க வேண்டும். இந்தியாவில் தற்போது அந்நிலை இல்லை. தனியார் பட்டா நிலங்களில் அதிகமான மரங்களை வளர்க்க முன்வரவேண்டும் என்றார். பேராசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.

 

0 comments: