கைதிகளின் திறமைகளை வளர்க்க தமிழக சிறைகளில் கலைக்குழுக்கள்

திருநெல்வேலி: தமிழக சிறைகளில் உள்ள கைதிகளின் திறமைகளை வெளிப்படுத்த கலைக்குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை மதுரை டி.ஐ.ஜி.,கோவிந்தராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

கைதிகளுக்கு உறவினர்கள் வழங்கும் உணவுப்பொருட்களை பாலிதீன் பைகளில் வழங்கக்கூடாது என வலியுறுத்தினார். பின், கைதிகளை பல்வேறு வகையிலும் மேம்படுத்த குழு அமைக்கும் திட்டத்தையும் அறிவித்தார். இதன்படி கைதிகளில் 15 பேர், சிறை வார்டன்கள் ஐந்து பேர் என மொத்தம் 20 பேர் அடங்கிய சுகாதார குழு ஏற்படுத்தப்படுகிறது. இவர்கள், கைதிகள் அறைகளை சுத்தமாக வைத்திருக்கவும், மனஉளைச்சலில் உள்ள கைதிகள் குளிக்காமலும், தன்சுத்தம் பேணாமலும் இருப்பவர்கள் சுகாதாரமாக இருக்கவும் வலியுறுத்துவார்கள்.

பாளை., சிறையில் கைதிகளாக இருந்தவர்கள் 16 பேர் பட்டதாரிகளாக பல்கலை பட்டத்துடன் வெளியேறி பணிகளில் உள்ளனர். தற்போதும் 43 பேர் பட்டப்படிப்பு படிக்கின்றனர். ஒருவர் எம்.பில்., இன்னொருவர் எம்.பி.ஏ., படிக்கின்றனர். எனவே கைதிகளிடம் கல்வியை பரப்புவதற்காக கல்விக்குழு ஏற்படுத்தப்படுகிறது. இவர்கள் மற்ற கைதிகளுக்கு முறைசாரா கல்வி கற்றுத்தருவார்கள். சிறைகைதிகளுக்கு ஜாமீனுக்கு முயற்சிக்கவும், வழக்குகளில் மனு போடவும், வழக்கு தொடர்பான பிரச்னைகளில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவும் சட்ட உதவிக்குழு ஏற்படுத்தப்படுகிறது. கைதிகளுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளுக்காக மருத்துவக்குழு ஒன்றும் ஏற்படுத்தப்படுகிறது. கைதிகளிடம் உள்ள ஓவியம், இசை, நாடகம் உள்ளிட்ட திறமைகளை வளர்ப்பதற்காக கலைக்குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதில் ஆர்வமுள்ள அனைத்து கைதிகளையும் உறுப்பினராக்கி கலைத்திறமைகளை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ""முதன்முதலில் பாளையங்கோட்டை சிறையில் துவக்கப்படும் இத்தகைய குழுக்களை போல, தமிழகம் முழுவதும் மற்ற சிறைகளிலும் குழுக்கள் ஏற்படுத்தப்படும்,'' என டி.ஐ.ஜி., கோவிந்தராஜ் தெரிவித்தார்.

 

0 comments: