அரசு அலுவலகங்களில் தமிழ்மொழி முழுமையாக பயன்படுத்த உத்தரவு

விருதுநகர்: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் இருக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு முடிவுகளின் அடிப்படையில், தமிழ் ஆட்சி மொழி செயலாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் எழிலரசு வெளியிட்டு அறிக்கை: அரசு அலுவலர்கள், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, பற்று ஒப்பு பதிவேடு தமிழில் இருக்க வேண்டும். அரசு அலுவலர்கள் தங்கள் இன்சியல் எழுத்துகளை தமிழில் எழுத வேண்டும். துறைகளில் உள்ள அனைத்து பதிவேடுகளிலும் தமிழில் மட்டுமே பதிவு மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக முத்திரைகளும், அலுவலகத்தின் பெயர் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். துறைகளில் சம்பளப் பதிவேடுகள், அலுவலக வரைவுகள், குறிப்புகள், கோப்புகள் அனைத்தையும் தமிழில் தான் தயாரிக்க வேண்டும். தங்களது துறை அலுவலகங்களில் 75 சதவீதமும், சார்பு அலுவலகங்களில் 100 சதவீதமும் தமிழ் தட்டச்சு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அலுவலக ஆணைகள், வெளியீடுகளில் கிறிஸ்தவ ஆண்டுக்கு நேரான திருவள்ளுவர் ஆண்டு, தமிழ் திங்கள், நாள் எழுதப்பட வேண்டும்.

மாநகராட்சி, அரசு சார்பு நிறுவனங்கள் கழகங்கள், வாரியங்கள், நிறுவனங்கள்,கூட்டுறவு இணையங்கள், தமிழ் தட்டச்சு பொறிகள் 65 சதவீதம் இருக்க வேண்டும். அலுவலக பயண நிரல்கள், துறை அலுவலர் நாட்குறிப்புகள், செயலகத்துறை, பிற துறை, சமநிலை அலுவலகங்கள், பொது மக்களுக்கு தமிழில் மட்டுமே கடிதங்கள் எழுத வேண்டும். தங்கள் துறைகளில் தயாரிக்கப்படும் காலமுறை அறிக்கைகளும் தமிழில் இருக்க வேண்டும். தங்களது துறைகளில் கம்ப்யூட்டரில் தமிழ் மென்பொருள் பயன்படுத்தப்பட வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் தினமும் ஒரு திருக்குறள், பொருளுடன் எழுதி வைக்க வேண்டும். ஒரு ஆட்சி சொல்லுக்கு ஆங்கிலமும், தமிழும் எழுதி வைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை வேண்டும்: தமிழ் ஆட்சி மொழி என அறிவிக்கும் போதே, இது போன்று அனைத்து துறை அலுவலகங்களுக்கும் தமிழ் தான் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழ் வளர்ச்சித்துறை எப்போது முன் வருகிறதோ, அப்போது தான் தமிழ் மொழி செயலாக்கத்திற்கு வரும்.

 

0 comments: