வெளி உலகை பார்த்தன வெள்ளைப்புலி குட்டிகள்

சென்னை:வண்டலூர் உயிரியல் பூங்காவில், இதுநாள்வரை கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு நேற்று திறந்து விடப்பட்ட வெள்ளைப்புலி குட்டிகளை பூங்கா அதிகாரிகளும், பார்வையாளர்களும் கைத்தட்டி வரவேற்றனர்.வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனு என்ற பெண் வெள்ளைப்புலி கடந்த ஜூன் மாதம் மூன்று குட்டிகளை ஈன்றது. புலிக் குட்டிகளும், தாய் புலி அனுவும் 83 நாட்களுக்கு பிறகு நேற்று, பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டன.

தலைமை வன உயிரின காப்பாளர் சுந்தரராஜன், பூங்கா இயக்குனர் ரெட்டி, கூடுதல் இயக்குனர் யுவராஜ், உதவி இயக்குனர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள், பார்வையாளர்கள் கைத்தட்டி புலிக் குட்டிகளை வரவேற்றனர். பார்வையாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.அழகிய, வெள்ளைப்புலி குட்டிகள், பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளன என்ற தகவலறிந்ததும், பூங்காவில் பல இடங்களில் இருந்த பார்வையாளர்கள் வெள்ளைப்புலி கூண்டு அருகே குவிந்தனர்.இந்நிலையில், 83 நாட்களுக்கு பிறகு கூண்டில் இருந்து வெளியே வந்த உற்சாகத்தில் புலிக் குட்டிகள் தாயுடன் சுதந்திரமாக விளையாடின.

இது குறித்து தலைமை வன உயிரின காப்பாளர் சுந்தரராஜன் கூறுகையில்," தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களை சிறப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று (நேற்று) பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ள புலிக் குட்டிகள் ஒவ்வொன்றும், 10 கிலோ முதல் 12 கிலோ எடை கொண்டதாக உள்ளன. மூன்று குட்டிகளில் இரண்டு பெண், ஒன்று ஆண். தற்போது, இந்த குட்டிகளுக்கு உணவாக தினசரி ஒரு கிலோ மாட்டிறைச்சி, ஒரு கிலோ கோழி இறைச்சி வழங்கப்படுகிறது.புலிக் குட்டிகளுக்கு விரைவில் தமிழ் பெயர் வைக்கப்படும். விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தில் சேர பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்' என்றார்.

பூங்காவின் புதிய வரவான வெள்ளைப்புலி குட்டிகளுக்கு, முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டுவார் என்று பூங்கா ஊழியர்கள் சிலர் கூறினர். அதற்கான வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, பறவைகள் பண்ணை அருகே, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் சார்பில், டீ ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, டீ மற்றும் டீத்துள் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பார்வையாளர்களின் வசதிக்காக மேலும் பல வசதிகளை ஏற்படுத்த பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

யானை, பறவை தத்தெடுப்பு:வண்டலூர் பூங்காவில் அமல்படுத்தப்பட்டுள்ள விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தில் சேர பொதுமக்கள் முன்வரவேண்டும் என, "தினமலர்' நாளிதழ் சமீபத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் காட்டி, பூங்கா நிர்வாகத்தை தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தி.நகரில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர். இன்ஜினியரிங் அன்ட் கான்ட்ராக்டர் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா என்பவர், 97 ஆயிரத்து 690 ரூபாயை வழங்கி, ஒரு யானையை ஒரு வருடத்திற்கு தத்தெடுத்துள்ளார். இதேபோல், சென்னையை சேர்ந்த ஒருவர், ஒரு பறவையை தத்தெடுத்துள்ளார்.

தாய்ப் புலியின் அக்கறை:விலங்குகளுக்கும் தாய்பாசம் உண்டு என்பது நேற்று வண்டலூர் பூங்காவில் நிரூபணமானது. கூண்டில் இருந்து முதலில் வெளியே வந்த தாய்ப் புலி, அங்கிருந்த கான்கிரீட் தளம் வழுக்குகிறதா என்பதை, காலால் தேய்த்து சோதனை செய்து பார்த்தது. பின், நான்கு கால்களையும் மடக்கி, முட்டிபோட்டு நடப்பது போல் கான்கிரீட் தளம் வழியாக கூண்டில் இருந்து இறங்கியது. தாய்ப் புலி நடந்து காட்டியது போலவே மூன்று குட்டிகளும் கால்களை முட்டிபோது, தவழ்ந்தபடி கூண்டில் இருந்து இறங்கின. குட்டிகள் சறுக்கி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக தாய்ப்புலி எடுத்துக் கொண்ட இந்த அக்கறை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

0 comments: