மாணவர்களின் தனித்திறமைகளைவெளிக்கொணர்வது ஆசிரியர் கடமை: இயக்குனர் பெருமாள்சாமி பேச்சு

ஓசூர்:""பள்ளி மாணவர்களிடம் உள்ள கற்றல் குறைபாடுகளை கண்டுபிடித்து நிவர்த்தி செய்வதோடு, அவர்களுடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்கள் கடமை,'' என தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.ஓசூர் சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கற்றல் குறைபாடு உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்காக, தமிழகத்தில் முதன் முறையாக கற்றல் குறைபாடு சிறப்பு கல்வி மையம் அமைக்கப்பட உள்ளது.

இங்கு, மாவட்டத்தில் உள்ள அனைத்துஅரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாகவும், கற்றல் முறையிலும் உள்ள குறைபாடுகளை களைவதற்கு, சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கற்றல் குறைபாடு சிறப்பு கல்வி மையம் அடிக்கல் நாட்டு விழா, சிஷ்யா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்தது.பள்ளி கல்வித் துறை இயக்குனர் பெருமாள், அடிக்கல் நாட்டி பேசியதாவது:பள்ளி மாணவ, மாணவியரிடம் உள்ள கற்றல் குறைபாடுகள் பெரும்பாலும் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் தெரிவதில்லை. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வியறிவு குறைவு என முத்திரை குத்தி, ஆசிரியர்கள் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். பெற்றோரும் குழந்தைகளுடைய கற்றல் குறைபாடுகளை கண்டுகொள்வதில்லை. நல்ல அறிவு, சிந்தனையுள்ள குழந்தைகளும் ஒரு சில கற்றல் குறைபாடுகளால் போதிய வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி இல்லாமல் அவர்களுடைய கல்வி வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது.

மாணவர்களிடம் உள்ள கற்றல் குறைபாடுகளை களைவதோடு, அவர்களிடம் மறைந்து கிடக்கும் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவது வகுப்பு ஆசிரியர்களின் முதற்கடமை. கற்றல் குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறவியிலே வரக்கூடிய நோய் இல்லை. இதுவும் எளிதில் நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு குறைபாடுமட்டுமே. மூன்று மாதம் மட்டும் பள்ளிக்குச் சென்ற தாமஸ் ஆல்வா எடிசன், பிற்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளைஉருவாக்கினார். அதனால், மாணவர்களுடைய கற்றல் குறைபாடுகளை களைந்து சிறப்பு பயிற்சி அளித்தால், அவர்களுடைய உள்ளார்ந்த தனித்திறமையை கண்டுபிடித்து வளர்க்க முடியும்.இவ்வாறு பெருமாள் பேசினார்.

 

0 comments: