உலக வங்கிக்கடன் உதவி முதலிடத்தில் இந்தியா

புதுடில்லி : உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுவதில், இந்தியா முதலிடம் வகிப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:வளரும் மற்றும் ஏழை நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வறுமையை ஒழிப்பதற்கும் உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்கள் வட்டியில்லாமல் கடன் வழங்குகின்றன.இந்த கடனுதவிகள் முறைப்படி செலவிடப்படுகிறதா என்பதையும் அந்த அமைப்புகள் கண்காணிக்கின்றன. இதில் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நாடுகளுக்கு கடனுதவி அதிகரித்து வழங்கப்படுகிறது. இந்த வகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் உதவியை சிறப்பாக கையாண்டதற்காக, இந்தியாவுக்கு சர்வதேச நிதியங்கள் தாராளமாக கடன் வழங்கியுள்ளன.


இதனால், 2009-10ம் நிதியாண்டில் உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிடமிருந்து, 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை பெற்று கடன்பெறும் ஏழை நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து மெக்சிகோ 31 ஆயிரம் கோடி கடனுதவியை பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறது.தென்னாப்ரிக்கா (18,620 கோடி), பிரேசில் (18,130 கோடி), துருக்கி (14,700 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதில், சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி.,) வாயிலாக 16 ஆயிரத்து 660 கோடியும், சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு (ஐ.டி.ஏ.,) மூலம் 6,370 கோடியும், உலக வங்கியிடமிருந்து (மொத்தம் 23,030 கோடி) இந்தியா கடனாக பெற்றுள்ளது.இதுதவிர வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக அமெரிக்காவின் சர்வதேச விவசாய வளர்ச்சி நிதியம்(ஐ.எப்.ஏ.டி.,), பிரிட்டன் சர்வதேச வளர்ச்சித் துறை(டி.எப்.ஐ.,), ஜெர்மனி அரசு வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி நிதியம் (ஓ.டி.ஏ.,) ஆகியவற்றிடமிருந்தும் அதிகளவு நிதி உதவி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


 

0 comments: