2,000 ஆண்டு தொன்மை வாய்ந்த மலையாளம் : செம்மொழி அந்தஸ்துக்கு தகுதி படைத்தது

திருவனந்தபுரம் : மலையாள மொழியானது, செம்மொழி அந்தஸ்துக்கு தகுதி படைத்தது, 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க, குறைந்தது 1,500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாக, அம்மொழி இருக்க வேண்டுமென்பது, மத்திய அரசின் விதி. மாநில மொழிகளில் செம்மொழி அந்தஸ்துக்கு உரிய மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கி செலவிடுகிறது. மத்திய அரசு அங்கீகரித்த செம்மொழி அந்தஸ்துக்குரிய மொழிகளாக தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம் உள்ளது. அதேபோல், தொன்மை வாய்ந்த மலையாள மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து கிடைக்க, கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. டாக்டர் புதுச்சேரி ராமச்சந்திரன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளராக, டாக்டர் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் செயல்படுகிறார்.

இக்கமிட்டியின் அயராத பணி காரணமாக, மலையாள மொழி குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அறிவியல் பூர்வமாக லிபி எழுத்து வடிவங்களின் நிபுணரான டாக்டர். ஐராவதம் மகாதேவன், சமீபத்தில் இக்கமிட்டியிடம் அளித்துள்ள தகவல்கள் தான் முக்கியத்துவத்தை அளித்துள்ளது. தமிழக தேனி மாவட்டத்தில் இருந்து கிடைத்த ஆதாரங்களில், கி.பி., 2ம் நூற்றாண்டிலே மலையாள மொழி இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. அங்கு கிடைத்தவற்றில், "பெடு' என்ற வார்த்தை (இறந்து கீழே விழுந்த) மலையாள மொழியை சேர்ந்தது. தமிழில் இதே வார்த்தை, "படு' என அழைக்கப்பட்டது. "தீயன்' என்ற வார்த்தையும், மலையாள மொழியைத் தவிர, பிற மொழிகளில் காணப்படாதது. இதுபோல் எடக்கல், பட்டணம் ஆகிய பகுதிகளில் இருந்தும், பல்வேறு தகவல்கள், ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த சாசனங்களில் பலப்புலி தாந்தகாரி (பல புலிகளை கொன்றவன்) என்பதும் மலையாள மொழி. இது 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது இலக்கிய, இலக்கண ரீதியாகவும், அக்காலத்தில் வாழ்ந்த குடிமக்கள் குறித்த ஆதாரங்களை நோக்கமாக கொண்டு கமிட்டி தொடர்ந்து முயற்சிக்கிறது.

 

1 comments:

யாழினி said...

மலையாளம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்து என்று சொல்ல்வது வேடிக்கையானது. காரணம் அந்த காலக்கட்டத்தில் தமிழ் மொழியே மலையாளமாக இருந்தது.. சிறந்த உதாரணம் சேரர் பெருமை பாடும் பத்து பாட்டு ஆகும். கொஞ்ச நாள் கழித்து அவர்கள் சங்க இலக்கியமும் மலையாளம் தான். மலையாளத்திலிருந்து தான் தமிழ் வந்தது என்பார்கள். டாக்டர் கலைஞரும் ஆமாம் போடுவார்... என்ன கொடுமைடா இது.... தமிழுக்கு அடுத்து மிகப்பழமையான மொழியான துளு மொழிக்கு மட்டுமே தென் திராவிட மொழிகளில் செம்மொழி தகுதி கிடைக்க வாய்ப்பிருக்கு.. காரணம் மலையாள இன்றைய லிபியே துளு எழுத்தினை திருடி வந்த லிபி தான்...