சுகாதார துறையில் ஜப்பான் முதலிடம்

சென்னை: ""சுகாதாரத் துறையில் உலகின் முதல் நாடாக ஜப்பான் திகழ்கிறது,'' என, ஒசகா பல்கலை பேராசிரியர் டி.கினோசிதா பேசினார். இந்தோ - ஜப்பான் வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், ஜப்பான் மற்றும் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், ஒசகா பல்கலை பேராசிரியர் டி.கினோசிதா பேசியதாவது:  தங்கள் குடிமக்களுக்கு தரமான வாழ்க்கையை வழங்குவதில் உலகளவில் நான்காவது இடத்திலும், கல்வியில் ஐந்தாவது இடத்திலும், சுகாதாரத்தில் முதலிடத்திலும் ஜப்பான் உள்ளது. கடந்த 2001-08ம் ஆண்டு வரையில் ஜப்பானிலும், 2008ம் ஆண்டு உலகளவிலும் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து முழுவீச்சில் மீள்வதற்குரிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தாததால், கடந்த ஆண்டு ஜப்பானின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 2.1 சதவீதமாக தான் இருந்தது. இதே ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. பொருளாதார திட்டங்களை வகுத்ததில் கடந்த காலங்களில் ஜப்பான் செய்த தவறுகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால், இந்தியா இன்னும் விரைவாக முன்னேறலாம். இவ்வாறு டி.கினோசிதா பேசினார்.

ஜப்பான் தூதரக அதிகாரி மினோவா பேசும்போது, "இந்தியாவில் தொழில் முதலீடுகளை செய்யும் மூன்றாவது நாடாக ஜப்பான் திகழ்கிறது. ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளின் வர்த்தக உறவு மேம்படுத்துவது அவசியம்' என்றார். நிகழ்ச்சியில், இந்தோ - ஜப்பான் வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

0 comments: