தனியார் பள்ளிகளுக்கு கிராக்கி:கர்நாடகாவில் திடீர் மாற்றம்

பெங்களூரு:கர்நாடக அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் தனியார் பள்ளிகளுக்குச் சென்றுவிடுவதாக சீர்த்திருத்த கமிஷன் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில், ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மேல்நிலை ஆரம்ப அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் சென்றுவிட்டனர்.இதுகுறித்து ஆய்வு செய்த அம்மாநில சீர்த்திருத்த கமிஷன், தனது இடைக்கால அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2006 முதல் 2009ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அரசு மேல்நிலை ஆரம்ப பள்ளிகளில் இருந்து 2.5 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்குச் சென்றுள்ளனர்.
அதே காலக்கட்டத்தில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 807லிருந்து 21 ஆயிரத்து 976 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு என்று ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையும் மீறி அங்கு, அரசுப் பள்ளிகளில் இருந்து பணம் செலுத்தி படிக்கும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லுவதற்கு காரணம் அங்கு மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.தனியார் பள்ளிகளில், மொழி சார்ந்த பாடங்கள், தகவல் தொடர்புதிறன், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்கள் மாணவர்களுக்கு எளிதாகவும், அக்கறையோடும் சொல்லித் தரப்படுகின்றன. மாணவர்களின் தனித் திறமைகளையும் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கின்றன.

மேலும், மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதற்கும் அவர்கள் உதவுகின்றனர். மிக முக்கியமாக, ஆங்கில வழியில் கல்வி கற்பதையே மாணவர்கள் விரும்புகின்றனர். இந்த காரணங்களால், தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதையே பெற்றோர்களும் விரும்புகின்றனர்.அரசு பள்ளிகளில், கல்வித் தரத்தை மேம்படுத்த தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். குறிப்பாக, மேனிலை ஆரம்ப பள்ளிகளில் தற்போது, பள்ளி படிப்புடன், ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் தான் பாடம் நடத்துகின்றனர். அந்த இடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

கன்னடம், ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை பயிற்றுவிக்க, தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் நல்ல ரிசல்ட் காட்டினால், ஊக்கத்தொகை அளிக்கலாம். உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். ஒரு வகுப்பறை, ஒரு ஆசிரியர் பள்ளிக்கூடங்களை ஒழித்துவிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

0 comments: