ராதாகிருஷ்ணன் விருது : 354 ஆசிரியர்கள் தேர்வு

சென்னை : சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, மாநிலம் முழுவதிலும் இருந்து, 354 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த தகவல், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் தினத்தில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கடந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து விட்டது. இவர்களுக்கு, வரும் செப்., 5ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், விருது வழங்க உள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் விருதுக்கு, மாநிலம் முழுவதிலும் இருந்து தகுதி வாய்ந்த 354 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்த தகவல் ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இவர்களுக்கு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கும் விழா, செப்., 5ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடக்கிறது. சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறார். 5,000 ரூபாய் ரொக்கம், பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

 

0 comments: