இந்தியாவின் முகவரி விவசாயம் : விஞ்ஞானி பொன்ராஜ் பேச்சு

கோவை : ""எந்த நாடு தன் முகவரிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறதோ அந்நாடே முன்னேறும், இந்தியாவின் முகவரி விவசாயம்,'' என பல்கலை விருது வழங்கும் விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் பேசினார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கும் விழா பல்கலையில் நேற்று நடந்தது.பல்கலை ஆராய்ச்சி மைய இயக்குனர் பரமாத்மா வரவேற்றார். துணைவேந்தர் முருகேச பூபதி தலைமை வகித்தார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் பேசியதாவது:ஒவ்வொருவரும் தங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து அதன்படி செயல்பட்டால் அனைவரும் சாதனையாளர்களாக முடியும். சர்க்கரை உற்பத்தியில் பூனே, மகாராஷ்ட்ரா, பீகார் மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழகம் சர்க்கரை உற்பத்தியில் முன்னேற்றம் அடைத்துள்ளது.நாட்டில் வேளாண்துறையில் தங்களுக்கு தேவையான விதை பொருட்களை விவசாயிகளே உற்பத்தி செய்து பயிரிடும் முறைக்கான முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் சர்வதேச அளவில் இத்திட்டத்தை அமல்படுத்திய முதல் நாடாக இந்தியா திகழும்.பின்லாந்து நாட்டின் பொருளாதாரம் ரஷ்யாவை நம்பியிருந்த நிலையில் ரஷ்யா பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த போது பின்லாந்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், வயர்லெஸ் கருவி மூலம் மேற்கொள்ளப்படும் ஆடியோ டெக்னாலஜியை மொபைல் போனில் பயன்படுத்த தீர்மானித்தனர். இம்முறையை மேற்கொண்ட நிறுவனம் இன்று சர்வதேச அளவில் மொபைல்போன் தயாரிப்பில் முன்னணியிலுள்ள "நோக்கியா' என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் மொத்த வருவாயில் இன்று வரை அந்நிறுவனம் 6 சதவீத பங்களிப்பு அளித்து வருகிறது. மாற்று சிந்தனையால் புரட்சி ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.இந்தியாவில் பெருமளவில் மக்கள் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 90 சதவீதத்தினர் வெறும் காப்பி,பேஸ்ட் மற்றும் கோடிங் என சொல்லகூடிய வேலையில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். கம்ப்யூட்டர், சி. சி++, ஜாவா உள்பட ஐ.டி.,துறையில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் அனைத்தும் வெளிநாட்டினர் கண்டுபிடித்துள்ளதே காரணம்.

நம் நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த நாடு தன் முகவரிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறதோ அந்நாடே முன்னேறும். இந்தியாவின் முகவரி விவசாயம். நாட்டின் கிராமப்புற வளர்ச்சிக்கு இந்தாண்டு முதல் 16,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.60 சதவீதத்துக்கும் மேல் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த வருவாயில் 17 சதவீதம் விவசாய பங்களிப்பு உள்ளது. வேளாண் உற்பத்தி இன்று போதிய நிலையில் இருந்தாலும் விளை நிலங்கள், உணவு பொருட்களின் தர குறைவு உள்ளிட்டவை காணப்படுகிறது. வரும் ஆண்டுகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு பொருட்களின் தேவையும் அதிகரிக்கும்; வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை உருவாகும். இதை தவிர்க் கும் நடவடிக்கையை இந்திய அரசு இப்போதே மேற்கொண் டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.விவசாயத்துறையில் குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. அங்கு 20 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் ஒவ்வொரு விலை நிலங்களிலும் நீர் தேக்கம் அமைக்கப்பட்டு, நர்மதா நதியுடன் இணைக்கப்பட்டது. வேளாண்துறை, வீட்டு பயன்பாடு, தொழில்துறை என அனைத்துக்கும் 24 மணி நேர தடையில்லா 3 பேஸ் மின்சாரம் வழங்கப்பட்டது.மின் திருட்டை கட்டுப்படுத்த முன்னாள் ராணுவத்தினர் 5,000 ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டனர்.

பருவ காலம் துவங்கும் முன் முதல் வேளாண் உற்பத்தி பொருட்கள் அறுவடை வரை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் தங்கி உதவினர். மாநில வருவாயில் 40 சதவீதம் வேளாண்துறை பங்களிப்பு அதிகரித்தது.வேளாண் பொருட்கள் அதிகளவில் கிடைத்தவுடன் அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அரசு வழிவகை செய்து கொடுத்தது. தமிழகத்திலும் இத்தகைய புரட்சி ஏற்படுத்த வேண்டியது அவசியம். அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் இதை சாதிக்க முடியும்.2050ல் தற்போது சர்வதேச அளவில் முன்னணி நாடாக உள்ள அமெரிக்காவை ஒதுக்கிவிட்டு இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் வல்லரசு நாடுகளின் பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும்.நாட்டில் 30 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் நிலையில் சர்வதேச அளவில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாய நிலங்கள் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களால் ஒட்டுமொத்தமாக வாங்கப்படுகிறது. இந்நிலை நீடித்தால் விவசாய நிலங்கள் குறைந்து வேளாண் பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.வியாதி வராமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி சிந்திக்காமல் என்ன வியாதிக்கு என்ன மருத்துவ முறை மருந்துகளை பயன்படுத்தலாம் என்பதில் மட்டுமே நாம் அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.இவ்வாறு, விஞ்ஞானி பொன்ராஜ் பேசினார்.

தொடர்ந்து, வேளாண் பல்கலையில் சாதித்த 235 விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கினார்.வேளாண் பல்கலை குழு உறுப்பினர்கள் அன்பு, சோமசுந்தரம், பதிவாளர் சுப்பையன் உள்பட பலர் பங்கேற்றனர். வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும் ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

 

0 comments: